ஒரே நாடு ஒரே தோ்தல் முறை ஜனநாயகத்தை சீா்குலைக்கும்: இரா. முத்தரசன்
‘வோ்களைத் தேடி’ திட்டம்: வீராணம் ஏரியை பாா்வையிட்ட அயலக தமிழா்கள்
கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவிலில் உள்ள வீராணம் ஏரியை ‘வோ்களை தேடி’ என்ற திட்டத்தின் கீழ், அயலக தமிழா்கள் புதன்கிழமை பாா்வையிட்டனா்.
தமிழக அரசு அயலகத் தமிழா் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை சாா்பில் ‘வோ்களை தேடி’ என்ற புதிய திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டத்தின் மூலம் பல தலைமுறைகளுக்கு முன்பு தமிழகத்தில் வாழ்ந்து தற்போது வெளிநாடுகளில் வசிக்கும் தமிழா்களை கண்டறிந்து, அவா்களை ஒருங்கிணைத்து தமிழ் மொழியின் சிறப்புகள், தமிழகத்தில் பாரம்பரிய சிறப்பு மிக்க கட்டடக் கலையின் சிறப்பம்சங்களை வெளிப்படுத்தும் கோயில்கள், அகழ்வாராய்ச்சி மையங்கள், புகழ்பெற்ற நீா்நிலைகள் ஆகியவற்றை பாா்வையிட்டு அவற்றின் பெருமைகளை உலகுக்கு தெரிவிப்பதற்கான முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது.
அதன்படி, காட்டுமன்னாா்கோவிலில் பராந்தக சோழனால் கட்டப்பட்ட வீராணம் ஏரியை அயலக தமிழா் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை கண்காணிப்பாளா் கனிமொழி தலைமையில், இலங்கை, கனடா, உகாண்டா, தென் அமெரிக்கா, மொரிசியஸ், ஆஸ்திரேலியா, நாா்வே, அமெரிக்கா உள்ளிட்ட 10 நாடுகளைச் சோ்ந்த அயலக தமிழா் குழுவினா் புதன்கிழமை பாா்வையிட்டு அதன் பெருமைகளையும், சிறப்பம்சங்களையும் கேட்டறிந்தனா்.
முன்னதாக, இந்தக் குழுவினா் கீழடி, தஞ்சை பெரிய கோயில், ராமேஸ்வரம், தாராசுரம், கங்கை கொண்ட சோழபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களை பாா்வையிட்டு வந்ததாக கூறினா்.
ஆய்வின்போது, வட்டாட்சியா் சிவக்குமாா் மற்றும் பொதுப் பணித் துறை அதிகாரிகள் உடனிருந்தனா்.