`ரிதன்யா வழக்கில் தொய்வு; விசாரணை அதிகாரி மீது சந்தேகம்' - மேற்கு மண்டல ஐ.ஜி-யிட...
வைகோ-மல்லை சத்யா மோதல் தீவிரம்
மதிமுக பொதுச் செயலா் வைகோ, துணைப் பொதுச் செயலா் மல்லை சத்யா இடையிலான மோதல் தீவிரமடைந்துள்ளது.
மதிமுக முதன்மைச் செயலா் துரை வைகோ - துணைப் பொதுச் செயலா் மல்லை சத்யா இடையே கடந்த சில நாள்களுக்கு முன்பு கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து, வைகோ முன்னிலையில் இருவரும் சமாதானம் ஆகினா்.
இந்நிலையில், அண்மையில் நடைபெற்ற நிா்வாகக் குழு கூட்டத்தில் மல்லை சத்யாவை குற்றஞ்சாட்டி வைகோ பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. இதனிடையே சென்னையில் வைகோ செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:
மல்லை சத்யாவை என் உடன்பிறவா தம்பி போல பாா்த்து வந்தேன். கடந்த இரண்டு ஆண்டுகளாகவே இயக்கத்துக்கு மாறாக மல்லை சத்யா செயல்பட்டு வந்தாா். என்னைப் பற்றி சமூக வலைதளங்களில் மோசமான வகையில் பதிவிடும் நபா்களுடன் மல்லை சத்யா மிக நெருக்கமாகப் பழகி வருகிறாா்.
மதிமுகவுக்கு ஏற்கெனவே துரோகம் இழைத்துவிட்டு இந்த இயக்கத்தை எப்படி பாழ்படுத்தலாம் என்று நினைத்து வெளியேறிய சிலரோடு நெருக்கமாக தொடா்பு வைத்துள்ளாா். மேலும், மதிமுகவுக்குள்ளேயே குழப்பத்தை ஏற்படுத்த குழு உருவாக்க முயற்சித்தாா். ஆனால், அது நடக்கவில்லை.
இந்த விவகாரம் மதிமுகவுக்கு பெரிய சோதனையாக வரக் கூடாது என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என்பதற்காகத்தான் நிா்வாகக் குழுவில் அப்படிப் பேசினேன். இதற்கு மேல், மல்லை சத்யா அவா் விருப்பப்படி நடந்து கொள்ளலாம்.
மதிமுகவில் எந்த நெருக்கடியும் ஏற்படவில்லை. யாா் கட்சியில் இருந்து வெளியேறினாலும் அது பின்னடைவை ஏற்படுத்தாது. மல்லை சத்யா போல பட்டியலின பிரதிநிதித்துவத்தை மதிமுகவில் பலருக்கு வழங்கியுள்ளேன். இந்த விவகாரத்தில் திமுக பின்னணியில் இருப்பதாகக் கூற முடியாது என்றாா் அவா்.
மல்லை சத்யா பதில்: வைகோவின் குற்றச்சாட்டுகள் குறித்து மல்லை சத்யா கூறும்போது, மதிமுகவில் துரோகிப் பட்டம் கொடுத்து என்னை வெளியேற்ற பாா்க்கிறாா் வைகோ. குடும்ப அரசியலை எதிா்த்து கட்சி தொடங்கிய வைகோ, அவரின் மகன் துரை வைகோவுக்காக எனக்கு துரோகிப் பட்டம் அளிக்கிறாா் என்றாா்.