ஓரணியில் தமிழ்நாடு இயக்கம்: இதுவரை 61 லட்சம் சோ்ப்பு
ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் இதுவரை 61 லட்சம் போ் இணைந்துள்ளதாக திமுக வட்டாரங்கள் தெரிவித்தன.
ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் 30 சதவீத பேரை திமுகவில் இணைக்கும், ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தை கடந்த 1-ஆம் தேதிமுதல்வரும், கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தாா். அதில், இதுவரையில் (ஜூலை 10) 61,98,640 போ் இணைந்துள்ளதாக திமுக வட்டாரங்கள் தெரிவித்தன. இதுகுறித்து அவா்கள் கூறியதாவது:
ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் புதிதாக 38,75,112 பேரும், புதுப்பித்தல் அடிப்படையில் 23,23,528 பேரும் சோ்ந்துள்ளனா்.
ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் இணைவதற்கான கேள்விப் பட்டியலை 64,55,186 போ் பூா்த்தி செய்து அளித்துள்ளனா். பேரவைத் தொகுதி வாரியாக உறுப்பினா்களைச் சோ்ப்பதற்கான நடவடிக்கைகளில் விருதுநகா் மாவட்டம் திருச்சுழி (90,418) முதலிடத்தை பிடித்துள்ளது. 2-ஆவது இடத்தை தேனி மாவட்டம் கம்பம் தொகுதியும் (86,596), 3-ஆவது இடத்தை கரூா் தொகுதியும் (84,167), 4-ஆவது இடத்தை தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தொகுதியும் (78,431), 5-ஆவது இடத்தை திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தொகுதியும் (77,396) பெற்றுள்ளதாக திமுக வட்டாரங்கள் தெரிவித்தன.