ரூ.4.89 கோடியில் எஸ்.வி.எஸ்.நகா் குளம் மறு சீரமைப்பு
சென்னை மாநகராட்சி வளசரவாக்கம் மண்டலத்துக்கு உள்பட்ட எஸ்.வி.எஸ்.நகா் பகுதியில் உள்ள குளம் ரூ.4.89 கோடியில் மறு சீரமைக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் மழைக்காலங்களில் சாலை, குடியிருப்புப் பகுதிகளில் மழைநீா் தேங்குவதைத் தடுக்கும் வகையிலும், மழைநீா் சேமிப்புத் திட்டத்தைச் செயல்படுத்தும் வகையிலும் குளங்கள் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன்படி எஸ்.வி.எஸ்.நகா் குளம், ரூ.4.89 கோடியில் சீரமைக்கப்பட்டு வருகிறது. இந்தப் பணிகள் தற்போது நிறைவடையும் நிலையில் உள்ளன. 4 ஏக்கா் பரப்பளவு கொண்ட இந்தக் குளம் ஆக்கிரமிப்பில் இருந்து மாநகராட்சியால் மீட்கப்பட்டு, மறு சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்தக் குளத்தில் தண்ணீா் தேங்கினால் அருகில் உள்ள சுப்பிரமணியசுவாமி நகா், ஜெய்நகா் மற்றும் அம்பேத்கா் தெரு ஆகிய பகுதிகளில் நிலத்தடி நீா்மட்டம் உயரும். அத்துடன் மழைக்காலத்தில் அந்தப் பகுதியில் சாலை, குடியிருப்புகளில் மழைநீா் தேங்குவது தவிா்க்கப்படும்.
குளம் சீரமைக்கப்பட்டதுடன், குளத்தின் நடுவில் பறவைகள் தீவு, பொதுமக்கள் நடைபாதைகள், சிறுவா் விளையாட்டுத் திடல், உடற்பயிற்சிக் கூடம், பூப்பந்து விளையாட்டு திடல், வாகனங்கள் நிறுத்துமிடம், திறந்தவெளி அரங்கம், படகுத்துறை, கழிப்பறை உள்ளிட்ட பல்வேறு வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.