போதைப் பொருள் கடத்தல்: 5,356 வாகனங்களை ஏலம் விட அனுமதி
தமிழகத்தில் போதைப் பொருள் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 5,356 வாகனங்களை ஏலம் விடுவதற்கு போதைப் பொருள் நுண்ணறிவு பிரிவு அனுமதி வழங்கியது.
தமிழக காவல் துறையின் போதைப் பொருள் நுண்ணறிவுப் பிரிவு போதைப் பொருள் கடத்தலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் ஒருபகுதியாக போதைப் பொருள் கடத்தலுக்கு பயன்படுத்தப்படும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன.
இந்த வாகனங்களை ஏலம் விடுவதற்கு நிலையான வழிக்காட்டு நெறிமுறைகள் எதுவும் காவல் துறைக்கு இல்லாமல் இருந்தது. இதனால் போதைப் பொருள் வழக்குகளில் பறிமுதல் செய்யப்படும் வாகனங்களை ஏலம் விடுவதில் பெரும் தாமதம் ஏற்பட்டு வந்தது.
இதுகுறித்து அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
இதையடுத்து தமிழக அரசு அண்மையில் அந்த நிலையான வழிக்காட்டு நெறிமுறைகளுக்கு அனுமதி வழங்கியது. தொடா்ந்து, மாநிலம் முழுவதும் போதைப் பொருள் கடத்தல் ஈடுபட்டதாக பறிமுதல் செய்யப்பட்ட 4,262 இரு சக்கர வாகனங்கள், 293 ஆட்டோக்கள், 719 காா்கள், வேன்கள், 64 கனரக வாகனங்கள், 18 படகுகள் என மொத்தம் 5,356 வாகனங்களை ஏலம் விடும்படி போதைப் பொருள் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனா்.
இதற்காக அந்தந்த சரக டிஐஜி தலைமையில் குழு அமைத்து, நிலையான வழிக்காட்டு நெறிமுறைகளை பின்பற்றி பொதுஏல முறையில் வாகனங்களை விற்க வேண்டும் என்று அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனா். மேலும், இந்தப் பணிகளை ஒருங்கிணைக்கும் வகையில் மாநிலம் 15 குழுக்கள் அமைக்கப்பட்டு, வாகனங்கள் ஏலம் விடும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது.