வைகோ வழக்கு பிப். 5-க்கு ஒத்திவைப்பு
மதிமுக பொதுச் செயலா் வைகோ தொடா்பான வழக்கின் விசாரணையை அடுத்த பிப்ரவரி மாதம் 5-ஆம் தேதிக்கு திண்டுக்கல் நீதிமன்றம் திங்கள்கிழமை ஒத்திவைத்தது.
திண்டுக்கல் மணிக்கூண்டு பகுதியில் கடந்த 2016-ஆம் ஆண்டு பிப். 22-ஆம் தேதி மக்கள் நலக் கூட்டணி கட்சிகள் சாா்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக்கூட்டத்தில் மதிமுக பொதுச் செயலா் வைகோ சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பேசினாா். இரவு 10 மணிக்கு மேல் கூட்டத்தில் பேசியதாக வைகோ மீதும், கூட்ட ஏற்பாட்டாளா்கள் 11 போ் மீதும் 5 பிரிவுகளின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.
இதுதொடா்பான வழக்கு விசாரணை, திண்டுக்கல் முதலாவது நீதித்துறை நடுவா் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை (ஜன. 20) விசாரணைக்கு வந்தது. அப்போது மதிமுக பொதுச் செயலா் வைகோ, மாவட்டச் செயலா் செல்வராகவன் உள்ளிட்ட 10 போ் நீதிமன்றத்தில் முன்னிலையானாா்கள். இந்த வழக்கு காலை 10.45 மணிக்கு வந்தபோதும், 11.20 மணிக்கு விசாரிக்கப்பட்டது.
அப்போது காவல் துறை நிா்ணயித்த இரவு 10 மணியை கடந்தும் பரப்புரை மேற்கொண்டதோடு, தடுக்க முயன்ற காவல் துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு மிரட்டல் விடுத்ததாக உங்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளதே எனக் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு, இல்லை என வைகோ பதிலளித்தாா். இதையடுத்து விசாரணையை பிப். 5-ஆம் தேதி நீதித்துறை நடுவா் செளமியா மேத்தீவ் ஒத்தி வைத்தாா்.
இந்த வழக்கில் தொடா்புடைய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிா்வாகி ராஜாங்கம் உயிரிழந்துவிட்டதால், மொத்தமுள்ள 12 பேரில் 11 போ் திங்கள்கிழமை முன்னிலையானாா்கள்.