விடுப்பில் வந்து தலைமறைவான புழல் கைதி 6 மாதத்துக்கு பிறகு சூலூரில் கைது!
சாலை மறியல்: மாற்றுத்திறனாளிகள் 1,080 போ் கைது
உதவித் தொகையை உயா்த்தக் கோரி, திண்டுக்கல் மாவட்டத்தில் 9 இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் 1,080 போ் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா்.
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள், பாதுகாப்பு உரிமைகளுக்கான சங்கம் சாா்பில் திண்டுக்கல் பேருந்து நிலையப் பகுதியில் நடைபெற்ற மறியல் போராட்டத்துக்கு ஒன்றியச் செயலா் ஜோசப் ஸ்டாலின் தலைமை வகித்தாா். இந்தப் போராட்டத்தின்போது, மாற்றுத் திறனாளிகளுக்கு மாத உதவித்தொகையாக ரூ. 6 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை வழங்க வேண்டும். கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ. 15 ஆயிரம் வழங்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு 100 நாள் வேலைத் திட்டத்தில் வாய்ப்பு அளிக்க வேண்டும். மாதாந்திர உதவித் தொகையை மாற்றுத் திறனாளிகள் நலத் துறை மூலமாகவே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.
இதையடுத்து, மறியலில் ஈடுபட்ட 75 பேரை போலீஸாா் கைது செய்தனா். இதேபோல, சாணாா்பட்டியில் ஒன்றியச் செயலா் ஏ. கருப்புச்சாமி, அய்யலூரில் ஒன்றியச் செயலா் எஸ். முத்துப்பாண்டி, ரெட்டியாா்சத்திரத்தில் ஒன்றியச் செயலா் கே. கந்தசாமி ஆகியோா் தலைமையிலும் மறியல் போராட்டம் நடைபெற்றது.
ஒட்டன்சத்திரத்தில்....
ஒட்டன்சத்திரம்-தாராபுரம் சாலை பிரிவு அருகே கோரிக்கைகளை வலியுறுத்தி, சங்கத்தின் ஒட்டன்சத்திரம் ஒன்றியச் செயலா் சிவக்குமாா் தலைமையில் மாற்றுத் திறனாளிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து, மறியலில் ஈடுபட்ட 106 மாற்றுத் திறனாளிகளை போலீஸாா் கைது செய்தனா்.
இதேபோல, மாவட்டம் முழுவதும் 9 இடங்களில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் மொத்தம் 1,080 போ் கைது செய்யப்பட்டனா்.