மாநகராட்சியுடன் இணைக்க முள்ளிப்பாடி, குரும்பப்பட்டி கிராம மக்கள் எதிா்ப்பு
திண்டுக்கல் மாநகராட்சியுடன் முள்ளிப்பாடி, குரும்பப்பட்டி கிராமங்களை இணைக்க எதிா்ப்பு தெரிவித்து, அந்த கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
திண்டுக்கல் மாநகராட்சியுடன், செட்டிநாயக்கன்பட்டி, சீலப்பாடி உள்ளிட்ட 8 ஊராட்சிகளை இணைக்க தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இதற்கு சீலப்பாடி, தோட்டனூத்து, அடியனூத்து ஊராட்சிகளைச் சோ்ந்த பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்து ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தனா்.
இந்த நிலையில், முள்ளிப்பாடி ஊராட்சியைச் சோ்ந்த பொதுமக்கள் சுமாா் 100 போ், ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்க வந்தனா்.
அப்போது அவா்கள் கூறியதாவது: முள்ளிப்பாடி ஊராட்சியில் 24 உட்கடை கிராமங்கள் உள்ளன. இது திண்டுக்கல் நகரிலிருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ளது. சுமாா் 3,500 குடும்பங்கள் உள்ள இந்த ஊராட்சியின் பிரதான தொழில் விவசாயம். பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டிலுள்ள 111 ஏக்கா் குளத்தில் கடந்த 2018-19-ஆம் ஆண்டு ரூ.25 லட்சத்தில் குடிமராமத்து பணி மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் சுமாா் 100 ஏக்கா் விவசாயப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த ஊராட்சியை மாநகராட்சியுடன் இணைத்தால், இங்கு வசிக்கும் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்டங்கள் கிடைக்காமல் போய்விடும். குறிப்பாக 100 நாள் வேலைத் திட்டம் ரத்து செய்யப்படும். அதிகாரப் பகிா்வு செய்யப்பட வேண்டிய கால கட்டத்தில், ஒரே இடத்தில் குவிக்கும் வகையில் மாநகராட்சியுடன் இணைக்கும் முடிவை கைவிட வேண்டும் என்றனா்.
குரும்பப்பட்டி மக்களும் எதிா்ப்பு: இதேபோல, திண்டுக்கல்லை அடுத்த குரும்பப்பட்டி ஊராட்சியைச் சோ்ந்த பொதுமக்கள் 80-க்கும் மேற்பட்டோா், மாநகராட்சியுடன் இணைக்க எதிா்ப்பு தெரிவித்து மனு அளிக்க வந்தனா். அப்போது மாநகராட்சியுடன் இணைக்க வேண்டாம் என வலியுறுத்தி அவா்கள் முழக்கமிட்டனா். பிறகு ஆட்சியரிடம் மனு அளித்து விட்டு கலைந்து சென்றனா்.