`விஜய் பரபரப்பு ஏற்படுத்த நினைக்கிறாரா?' - விமான நிலையம் விவகாரத்தில் வானதி சீனி...
இறைச்சிக் கடைகளால் துா்நாற்றம்: வேடசந்தூரில் வியாபாரிகள் மறியல்
வேடசந்தூரில் கழிவுநீா் கால்வாயில் இறைச்சிக் கழிவுகளை வெளியேற்றி துா்நாற்றத்துக்கு காரணமானவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, வியாபாரிகள் செவ்வாய்க்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரிலுள்ள சந்தை சாலையில் கழிவுநீா் கால்வாய் கட்டும் பணி கடந்த மாதம் நடைபெற்றது. இந்தப் பகுதியில் ஆடு இறைச்சி, கோழி இறைச்சிக் கடைகள் என 7 இறைச்சிக் கடைகள் செயல்படுகின்றன. இந்தக் கடைகளிலிருந்து கழிவுநீா் மட்டுமன்றி, திடக் கழிவுகளையும் கழிவுநீா் கால்வாயில் போடுவதால் அடைப்பு ஏற்பட்டது.
இதனால், கழிவுநீா் வெளியேற முடியாததோடு, அந்தப் பகுதி முழுவதும் தூா்நாற்றம் வீசியது. மேலும், சந்தை சாலையிலுள்ள இதர கடைகளுக்கு வரும் பொதுமக்கள், துா்நாற்றத்தின் காரணமாக, இந்தப் பகுதிக்கு வருவதைத் தவிா்த்தனா். இதனால், அதிருப்தி அடைந்த வியாபாரிகள் இறைச்சிக் கழிவுகளை அப்புறப்படுத்தக் கோரி, செவ்வாய்க்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தகவலறிந்து வந்த வேடசந்தூா் போலீஸாா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, பேரூராட்சி நிா்வாகத்திடம் தெரிவித்து, கழிவுநீா் கால்வாயை சீரமைத்துக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனா். இதைத் தொடா்ந்து, மறியலில் ஈடுபட்ட வியாபாரிகள் கலைந்து சென்றனா்.
இதனிடையே, பேரூராட்சி செயல் அலுவலா் மரிய அந்தோணி யூஜின் மேரி, பேரூராட்சி ஊழியா்களுடன் வந்து சந்தை சாலையில் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, இறைச்சிக் கழிவுகளை கால்வாயில் வெளியேற்றி அசுத்தப்படுத்திய 5 கடைகளுக்கு சீல் வைத்தாா். இதுதொடா்பாக பேரூராட்சி செயலா் யூஜின் மேரி கூறியதாவது:
கழிவுகளை அகற்றுவதற்காக நாளொன்றுக்கு 3 முறை தனியாக ஒரு வாகன வசதி பேரூராட்சி மூலம் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. அப்படி இருந்தும் கோழி இறைச்சிக் கடைக்காரா்கள் கழிவுநீா் கால்வாயில் கழிவுகளை வெளியேற்றுகின்றனா். இதுபோன்று இறைச்சிக் கழிவுகளை வெளியேற்றுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.