``ஷேக் ஹசீனா மீண்டும் பிரதமராவார்... இந்தியாவுக்கு நன்றி" - அவாமி லீக் கட்சித் தலைவர் கூறுவதென்ன?
கடந்த ஆண்டு வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக உருவான மாணவர் போராட்டம், ஷேக் ஹசீனாவை நாட்டை விட்டு வெளியேறும் அளவு தீவிரமடைந்தது. அதைத் தொடர்ந்து அவர் இந்தியாவில் தஞ்சமடைந்திருக்கிறார். இந்த நிலையில், ஷேக் ஹசீனாவின் அவாமி லீக்கின் தலைவர்களில் ஒருவரும், ஷேக் ஹசீனாவுக்கு அரசியல் ரீதியில் நெருக்கமானவருமான ரப்பி ஆலம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ``ஷேக் ஹசீனா விரைவில் பங்களாதேஷ் திரும்புவார்.
கடந்த ஆண்டு எழுந்த பயங்கரவாத எழுச்சிப் போராட்டத்தில் ஈடுபட்ட இளம் தலைமுறையினர் மீது, எந்தக் குற்றமும் இல்லை. அவர்கள் மற்றவர்களால் கையாளப்பட்டிருக்கிறார்கள். பங்களாதேஷ் தற்போது தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. அதை சர்வதேச சமூகம் கவனிக்க வேண்டும். எங்கள் தலைவர் இந்தியாவில் தங்க வைக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பாதுகாப்பு வழங்கியதற்காக இந்திய அரசுக்கு நாங்கள் மிகவும் நன்றி கூறுகிறோம். எங்கள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு பாதுகாப்பான பயணப் பாதையை வழங்கியதற்காக பிரதமர் மோடிக்கும், இந்திய மக்களுக்கும் நன்றி கூறுகிறோம். விரைவில் ஷேக் ஹசீனா பங்களாதேஷ் திரும்புவார்... மீண்டும் பிரதமராகுவார்" என்றார்.