Bison: ``நீங்க ஏன் இந்த மாதிரி படம் எடுக்குறீங்க? - இது அபத்தமான கேள்வி" - மேடைய...
‘ஸ்டாலின் முளைவிட வைத்தார்’ ‘பழனிசாமி நாற்றாகவே வளர்த்தார்’ ஆட்சிகள் மாறினாலும் வற்றாத விவசாயகண்ணீர்
அனைவருக்கும் பசுமை வணக்கம்...
‘விளைவித்த நெல் மூட்டைகளைச் சேமிக்க, போதுமான குடோன்கள் இல்லை, தார்ப்பாய்கள் இல்லை’ என்று விவசாயிகள் குமுறியதையெல்லாம் இரண்டு மாதங்களுக்கு முன்பே, இதே தலையங்கம் பகுதியில் குறிப்பிட்டிருந்தோம். ஆனால், அதன்பிறகும்கூட தமிழ்நாடு அரசு விழித்துக்கொள்ளவில்லை.
விளைவு?
காவிரி டெல்டா மாவட்டங்கள் உட்பட மாநிலத்தின் பல மாவட்டங்களிலும் அறுவடையான நெல்லைச் சேமித்து வைக்கும் குடோன்களில் தண்ணீர் தேங்கி நெல் மூட்டைகள் சேதம் அடைந்திருக்கின்றன. விவசாயிகள் விற்பனை செய்வதற்காகக் கொண்டுவந்து குடோன்களுக்கு வெளியே வைத்த மூட்டையிலிருக்கும் நெல் மணிகள் முளைவிட்டு வீணாகிக் கொண்டிருக்கின்றன.
வயலிலேயே நெற்பயிர்கள் மூழ்கினால், அது இயற்கை இடர்ப்பாடு எனலாம். ஆனால், பாடுபட்டு உழைத்து, அறுவடை செய்து, கொள்முதல் நிலையத்துக்குக் கொண்டுவரப்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைவது, ஒட்டுமொத்த நிர்வாகத் தவறேயன்றி வேறில்லை.
உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, ‘நெல் உற்பத்தி டெல்டா மாவட்டங்களில் கடந்த ஆண்டு 1.28 லட்சம் மெட்ரிக் டன்னாக இருந்து, இந்த ஆண்டு 1.65 லட்சம் மெட்ரிக் டன்னாக அதிகரித்துள்ளது’ என்று காரணம் சொல்லிக்கொண்டிருக்கிறார்.
கூடவே, ‘22% ஈரப்பதத்தில் நெல்லை கொள்முதல் செய்ய அனுமதி கேட்டு மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியிருக்கிறோம்’ என்றும் தெரிவித்துள்ளார்.
‘குறுவை சாகுபடிக்குக் குறித்த நேரத்தில் மேட்டூரிலிருந்து தண்ணீர் திறந்தோம்’ என்று மார்தட்டுகிறது ஸ்டாலின் அரசு. ஆனால், ‘அதன் காரணமாகப் பயிரிடும் பரப்பும் விளைச்சலும் அதிகரிக்கும். சேமிப்பதற்குக் கூடுதலாக இடவசதி தேவைப்படும்’ என்பதையெல்லாம் முன்கூட்டியே ஏன் கணிக்கவில்லை. ‘கூடுதல் ஈரப்பதத்தில் கொள்முதல் செய்ய அனுமதி தேவை’ என்று முன்கூட்டியே மத்திய அரசுக்குக் கடிதம் எழுத வேண்டும் என்று ஏன் தோன்றவில்லை.
எந்தக் கட்சி ஆட்சி நடந்தாலும், இந்தக் கொடுமைகளுக்குத் தீர்வில்லை. இந்த லட்சணத்தில் இப்போது தஞ்சாவூருக்கு ஓடோடிப்போய், ‘கொள்முதல் செய்த நெல்மணிகளையெல்லாம் முளைகட்டிக் கொண்டிருக்கிறது ஸ்டாலின் அரசு?’ என்று ‘கச்சேரி’ வைத்திருக்கிறார், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இவருடைய ஆட்சிக் காலத்திலேயே உருப்படியான நடவடிக்கை எடுத்திருந்தால், இந்த நிலை ஏற்பட்டிருக்காதே என்று இவருக்கு யாராவதுதான் சொல்ல வேண்டும் போல!
அவர்தான் அப்படி என்றால், ‘எடப்பாடி பழனிசாமி ஆட்சிக் காலத்தில், நாற்று நடும் அளவுக்கு நெல் மணிகள் முளைத்திருந்தன’ என்று லாவணி பாடியிருக்கிறார், வேளாண்மைத் துறை அமைச்சர், எம்.ஆர்.கே பன்னீர்செல்வம்.
ம்... ‘எடப்பாடி நாற்றுவிடும் அளவுக்கு முளைக்க வைத்தார். ஸ்டாலின் முளைவிடும் அளவுக்குத்தான் நெல்மணிகளை நனைய வைத்திருக்கிறார்’ என்று ஏதோ சாதனை செய்துவிட்டதைப்போல கொஞ்சம்கூட கூச்சமில்லாமல் பேசிக்கொண்டிருக்கிறார், அமைச்சர்.
ம்... எப்போதுதான் விடியுமோ?!
- ஆசிரியர்




















