லாஸ் ஏஞ்சலீஸ் காட்டுத்தீ: உயிரிழப்பு தொடர்ந்து அதிகரிப்பு..!
``ஸ்டீவ் ஜாப்ஸ் ஐபோன் கண்டுபிடித்தார்; ஆப்பிள் அதில் அமர்ந்துகொண்டிருக்கிறது" - மார்க் ஜுக்கர்பெர்க்
ஸ்மார்ட்போன் விற்பனையில் உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக ஆப்பிள் நிறுவனம் விளங்குகிறது. மற்ற ஸ்மாட்போன்களைப் போல ஆன்ட்ராய்டு இயங்குதளம் அல்லாது iOS மூலம் ஐபோன்கள் இயங்குகின்றன. இன்று ஆப்பிள் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு ஐபோன்களே முக்கிய காரணமாக இருக்கிறது.
அதேசமயம், சாமானியர்கள் வாங்குமளவுக்கு ஏற்ற விலைகளில் ஐபோன்கள் விற்கப்படுவதில்லை. பிரீமியம் என்ற பெயரில் அதை ஒரு யுத்தியாகவே செய்கிறது ஆப்பிள் நிறுவனம். இந்த நிலையில், ஸ்டீவ் ஜாப்ஸ் (Steve Jobs) கண்டுபிடித்த ஐபோன் மீது 20 ஆண்டுகளாக ஆப்பிள் அமர்ந்திருப்பதாக மெட்டா (meta) நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் (Mark Zuckerberg) விமர்சித்திருக்கிறார்.
joe rogan experience பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் பேசிய மார்க் ஜுக்கர்பெர்க், ``ஒருபக்கம் ஐபோன் சிறப்பாக இருக்கிறது. அதற்கு முக்கிய காரணம் இன்று அனைவரிடமும் ஸ்மார்ட்போன் இருக்கிறது. மறுபக்கம், அதே தளத்தைப் பயன்படுத்தி தன்னிச்சையாக நிறைய விதிகளை முன்வைக்கிறார்கள். உண்மையில் அவர்கள் பெரிதாகக் கண்டுபிடிக்கவில்லை என்று உணர்கிறேன். ஸ்டீவ் ஜாப்ஸ் ஐபோன் கண்டுபிடித்தார், ஆப்பிள் அதில் 20 ஆண்டுகளாக அமர்ந்துகொண்டிருக்கிறது.
புதிய மாடல்களில் பெரிய அளவில் மேம்பாடுகள் எதுவும் இல்லாததால் அதன் விற்பனை இப்போது சிரமத்தில் இருக்கிறது. டெவலப்பர்கள் மீது 30 சதவிகித கமிஷன், AirPods போன்ற கூடுதல் சாதனங்களை வாங்க மக்களைத் தள்ளுவதன் மூலம் ஆப்பிள் லாபம் ஈட்டுகிறது. அவர்கள் AirPods உருவாக்குவது சரிதான். ஆனால், அதேபோன்று ஐபோனுடன் இணைக்கக்கூடிய ஒன்றை மற்றவர்கள் உருவாக்குவதை அவர்கள் தடுக்கின்றனர். ஆப்பிள் தனது சீரற்ற செயல்படுத்துவதை நிறுத்தினால், மெட்டாவின் லாபம் இரட்டிப்பாகும்." என்று கூறினார்.
மேலும், தன்னுடைய கடுமையான விதிகளுக்கு பிரைவசியை முக்கிய காரணமாக ஆப்பிள் கூறுவதை ஏற்காத மார்க் ஜுக்கர்பெர்க், ``மூன்றாம் தரப்பு டெவலப்பர்களைக் கட்டுப்படுத்துவதற்குப் பதிலாக, பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்துவதன் மூலம் ஆப்பிள் இந்தச் சிக்கலைத் தீர்க்க முடியும்." என்றார்.