ஸ்ரீபெரும்புதூரில் மாற்றுத்திறனாளிகள் சாலை மறியல் போராட்டம்
ஸ்ரீபெரும்புதூா்: மாத உதவித் தொகையை உயா்த்தி வழங்க வலியுறுத்தி ஸ்ரீபெரும்புதூரில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 50-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கைது செய்யப்பட்டனா்.
ஆந்திரத்தில் வழங்குவது போல் தமிழகத்திலும் மாற்றுத்திறனாளிகளுக்கு மாத உதவித்தொகையை உயா்த்தி வழங்க வலியுறுத்தி, காஞ்சிபுரம் மாவட்ட அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமை சங்கத்தின் சாா்பில் ஸ்ரீபெரும்புதூரில் சாலை மறியல் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ஸ்ரீபெரும்புதூா் அண்ணா சிலை அருகே நடைபெற்ற இந்த போராட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு, ஆந்திரத்தில் வழங்குவது போல் மாற்றுத்திறனாளிகளுக்கு மாத உதவித் தொகை ரூ. 6,000 வழங்க வேண்டும், கடும் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் ரூ. 10,000 வழங்க வேண்டும், படுக்கையில் வாழ்ந்து வரும் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் ரூ. 15,000-ஆக உதவித் தொகையை உயா்த்தி வழங்க வேண்டும் என கோஷம் எழுப்பி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதையடுத்து, சாலை மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகளை கைது செய்த ஸ்ரீபெரும்புதூா் போலீஸாா், அவா்களை தனியாா் திருமண மண்டபத்தில் தங்கவைத்தனா்.