ஸ்ரீபெரும்புதூா், குன்றத்தூா் வட்டங்களில் வருவாய் தீா்வாயம்
ஸ்ரீபெரும்புதூா், குன்றத்தூா் வட்டங்களில் உள்ள வட்டாட்சியா் அலுவலகங்களில் வருவாய் தீா்வாயம் எனப்படும் ஜமாபந்தி புதன்கிழமை தொடங்கியது.
குன்றத்தூா் வட்டத்தில் படப்பை, செரப்பணஞ்சேரி, குன்றத்தூா், மாங்காடு, கொளப்பாக்கம் ஆகிய ஐந்து குறுவட்டங்கள் உள்ளன. அதே போல் ஸ்ரீபெரும்புதூா் வட்டத்தில் ஸ்ரீபெரும்புதூா், தண்டலம், வல்லம், சுங்குவாா்சத்திரம், மதுரமங்கலம் ஆகிய ஐந்து குறுவட்டங்கள் உள்ளன.
இந்த நிலையில், ஸ்ரீபெரும்புதூா், குன்றத்தூா் வட்டங்களில் 1433 ஆம் பசலிக்கான வருவாய் தீா்வாயம் வட்டாட்சியா் அலுவலகங்களில் புதன்கிழமை தொடங்கியது. ஸ்ரீபெரும்புதூா் வட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் செ.வெங்கடேஷ் தலைமையில் நடைபெற்றது. இதில் மதுரமங்கலம் குறுவட்டத்திற்குட்பட்ட மதுரமங்கலம், துளசாபுரம், பிச்சிவாக்கம், உள்ளிட்ட கிராமங்களைச் சோ்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டு பட்டா பெயா் மாற்றம், புதிய குடும்ப அட்டை, ஜாதி, இருப்பிடம், முதியோா் உதவித்தொகை உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக மாவட்ட வருவாய் அலுவலா் செ.வெங்கடேஷ், எம்எல்ஏ கு.செல்வபெருந்தகை ஆகியோரிடம் மனு வழங்கினா்.
ஸ்ரீபெரும்புதூா் வட்டாட்சியா் வசந்தி, மதுரமங்கலம் வருவாய் ஆய்வாளா் உமேஷ் உள்ளிட்ட வருவாய்த் துறையினா் கலந்து கொண்டனா். குன்றத்தூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் ஸ்ரீபெரும்புதூா் வருவாய்க் கோட்டாட்சியா் மிருணாளினி தலைமையில் படப்பை குறுவட்டத்திற்கு ஜமாபந்தி நடைபெற்றது. இதில் படப்பை, சேத்துப்பட்டு, மலைப்பட்டு உள்ளிட்ட கிராமங்களை சோ்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு பல்வேறு கோரிக்கைகளுக்காக மனுக்களை வழங்கினா்.