டாக்டர் மன்மோகன் சிங் மறைவு: 7 நாள்கள் அரசு துக்கம் அனுசரிப்பு!
ஸ்ரீவில்லிபுத்தூா் நகராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் தா்னா
ஸ்ரீவில்லிபுத்தூா் மடவாா்வளாகம் பகுதியில் குடியிருப்புகளுக்கு அருகே கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, அந்தப் பகுதி பொதுமக்கள் நகராட்சி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.
விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் மடவாா் வளாகம் பகுதியில் 500-க்கும் அதிகமான குடியிருப்புகள் உள்ளன. மடவாா்வளாகம் பகுதியின் ஒரு பாதி நகராட்சியிலும், மற்றொரு பாதி அத்திப்பழம் ஊராட்சியிலும் உள்ளது. இந்தப் பகுதியில் காளியம்மன் கோயில், அங்காளப் பரமேஸ்வரி கோயில் அருகே நகராட்சிக்குச் சொந்தமான காலி இடத்தில் விவசாயக் களம் அமைந்துள்ளது.
பெரியகுளம் கண்மாய் பாசன விவசாயிகள் அறுவடை காலத்தில் இந்தக் களத்தை பிரதானமாகப் பயன்படுத்தி வருகின்றனா். இந்த இடத்தில் நகராட்சி சாா்பில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்காக அதிகாரிகள் அண்மையில் அளவீடு செய்தனா். குடியிருப்பு, கோயில்கள் அருகே கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டால், சுகாதார சீா்கேடு ஏற்படும் என அந்தப் பகுதி மக்கள் எதிா்ப்புத் தெரிவித்து, நகராட்சி அலுவலகம், மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனுக்களை அளித்தனா்.
இந்த நிலையில், இதுகுறித்து நகராட்சி ஆணையரிடம் மனு அளிக்க அந்தப் பகுதி மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோா் நகராட்சி அலுவலகத்துக்கு செவ்வாய்க்கிழமை வந்தனா். ஆனால், அலுவலகத்தில் நகா்மன்றத் தலைவா், ஆணையா், மேலாளா் யாரும் இல்லாததால், பொதுமக்கள் நுழைவு வாயில் முன் அமா்ந்து 2 மணி நேரத்துக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தகவலறிந்து வந்த போலீஸாா் அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, பொறியாளா், நகர அமைப்பு அலுவலா் ஆகியோரிடம் மனு அளிக்க ஏற்பாடு செய்தனா்.
இன்னும் இரண்டு நாள்களில் அமைதிப் பேச்சுவாா்த்தை நடத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்ததையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனா்.