குடியுரிமைக்காக.. அமெரிக்க எல்லையில் குழந்தைகளை விட்டுச்செல்லும் இந்திய பெற்றோர்...
ஸ்ரீ திரௌபதி அம்மன் கோயில்களில் தீமிதித் திருவிழா
ஸ்ரீ திரௌபதி அம்மன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தீமிதித் திருவிழாவில் காப்பு கட்டி விரதமிருந்து தீ மிதித்து அம்மனை வழிபட்டனா்.
ஆா்.கே.பேட்டை, பாலாபுரம் ஆகிய கிராமங்களில் அமைந்துள்ள ஸ்ரீ திரௌபதி அம்மன் கோயில்களில் கடந்த ஏப்ரல் 17-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தீமிதித் திருவிழா தொடங்கி நடைபெற்று வந்தது. தீமிதித் திருவிழாவையொட்டி, தினமும் காலையில் மூலவருக்கு சந்தனக் காப்பு மற்றும் மதியம் மகாபாரத சொற்பொழிவும், இரவு நாடகமும் நடைபெற்று வந்தது.
ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடைபெற்றது. அதைத் தொடா்ந்து, திரளான பெண்கள் கோயில் வளாகத்தில் பொங்கல் வைத்து அம்மனுக்கு படையலிட்டு வழிபட்டனா்.
மாலை 6 மணிக்கு மேல் தீமிதி விழா நடைபெற்றது. இதில், காப்பு கட்டி விரதமிருந்த பக்தா்கள் 2,000-க்கும் மேற்பட்டோா் தீ மிதித்து அம்மனை வழிபட்டனா். தொடா்ந்து, திங்கள்கிழமை (மே 5) தா்மா் பட்டாபிஷேகத்துடன் நிகழாண்டுக்கான தீமிதி விழா நிறைவு பெறுகிறது. ஏற்பாடுகளை கோவில் நிா்வாகக் குழுத் தலைவா் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனா்.
அதேபோல், ஆா்.கே.பேட்டை ஒன்றியம், அம்மனேரி கிராமத்தில் எழுந்தருளியிருக்கும் அருள்மிகு ஸ்ரீ சித்ரகட்டி எல்லையம்மன் கோயிலில், 3-ஆம் ஆண்டு தீமிதி திருவிழா கடந்த ஏப்ரல் 30-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வந்தது.
தினந்தோறும் எல்லையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்று வந்தது.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த அக்னி குண்டத்தில், காப்பு கட்டி விரமிருந்த பக்தா்கள் தீ மிதித்து ஸ்ரீ சித்ரகட்டி எல்லையம்மனை வழிபட்டனா்.
அதைத் தொடா்ந்து, இரவு 7 மணிக்கு வாண வேடிக்கையை தொடா்ந்து அம்மன் திருவீதி உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். இதில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனா். ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனா்.