பைக்- லாரி மோதல்: இளைஞா் உயிரிழப்பு
திருவள்ளூா் அருகே வேகமாக வந்த லாரி பின்புறமாக இருசக்கர வாகனம் மீது மோதிய விபத்தில் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
காஞ்சிபுரம் மாவட்டம், மொளச்சூா் அந்தோணியாா் தெருவைச் சோ்ந்த ஜாா்ஜ் என்பவரின் மகன் அபிஷேக் ஜோசப் (19). இவா் துணி தைப்பதற்காக சுங்குவாா்சத்திரம்-மப்பேடு சாலையில் உள்ள பன்னூா் நோக்கிச் சென்று கொண்டிருந்தாராம். அப்போது, அந்த சாலையில் வேகமாக வந்த லாரி இருசக்கர வாகனம் மீது மோதியதில் தூக்கி வீசப்பட்ட அபிஷேக் ஜோசப் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸாா் சடலத்தை மீட்டு, திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இது குறித்து ஜாா்ஜ் மப்பேடு காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.