கட்டுமானப் பொருள்கள் ஏற்றி வந்த வாகனங்களை சிறைபிடித்து ஒப்பந்ததாரா்கள் போராட்டம்
ஹிந்தியைத் திணிக்கும் மறைமுக முயற்சிதான் புதிய கல்விக் கொள்கை: அன்பில் மகேஸ்
தமிழ்நாட்டில் ஹிந்தியைத் திணிக்கும் மறைமுக முயற்சிதான் புதிய கல்விக் கொள்கை என அமைச்சர் அன்பில் மகேஸ் கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களுடன் பேசிய அவர்,
"புதிய கல்விக் கொள்கையால் மாணவர்களின் இடைநிற்றல் அதிகரிக்கும். புதிய கல்விக்கொள்கையை கொண்டுவந்து வரலாற்றை மாற்ற முயற்சி செய்கிறார்கள். 56 மொழிகளை ஹிந்தி விழுங்கியுள்ளது. மொழிகளைத் திணிக்காமல் மாணவர்களின் மன அழுத்தத்தைக் குறைக்க வேண்டும்.
புதிய கல்விக் கொள்கைக்கு தமிழ்நாடு அரசிடம் கருத்து கேட்டீர்களா? பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் இருமொழிக் கொள்கையை பின்பற்றிய தமிழ்நாடு முன்னேறியுள்ளது.
இருமொழிக் கொள்கையில் படித்தவர்கள்தான் பல துறைகளில் உயர்பதவியில் இருக்கிறார்கள்.
தமிழ்நாட்டில் அனைத்து முக்கிய அரசியல் கட்சிகளும் இருமொழிக் கொள்கையை ஆதரிக்கின்றன.
தமிழின் பெருமையை எங்களுக்கு நீங்கள் சொல்லவேண்டிய அவசியமில்லை. மத்திய அரசு, தமிழ்நாட்டை பிளாக்மெயில் செய்வதை நிறுத்த வேண்டும். நிதியை காரணம்காட்டி பல விஷயங்களில் அழுத்தம் கொடுக்கிறார்கள். கூட்டாட்சி ஒத்துழைப்பையே தமிழ்நாடு அரசு விரும்புகிறது.
தமிழ்நாட்டில் ஹிந்தியைத் திணிக்கும் மறைமுக முயற்சிதான் தேசிய கல்விக் கொள்கை.
தமிழக மாணவர்களின் நலன் கருதி கல்வி நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும்.
புதிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு ஒருபோதும் ஏற்காது" எனத் தெரிவித்தார்.
இதையும் படிக்க | மும்மொழிக் கொள்கையை ஒருபோதும் ஏற்க மாட்டோம்: உதயநிதி ஸ்டாலின்
முன்னதாக, தமிழக பள்ளி மாணவர்களுக்கான கல்வி நிதியைத் தர மத்திய அரசு மறுக்கிறது என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் குற்றம்சாட்டியிருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக, 'தேசிய கல்விக் கொள்கையை ஏற்காத பட்சத்தில் தமிழகத்திற்கு ரூ. 2,152 கோடி கல்வி நிதியை விடுவிக்க சட்டத்தில் இடமில்லை' என பிரயாக்ராஜில் செய்தியாளர்களுடன் பேசிய மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்திருந்தார். மத்திய அமைச்சரின் இந்த பதிலுக்கு திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
தமிழகத்திற்கு மும்மொழிக்கொள்கை தேவையில்லை, இருமொழிக் கொள்கையே போதும் என அரசியல் கட்சியினர் திட்டவட்டமாகக் கூறி வருகின்றனர்.
இதனிடையே, தமிழகத்திற்கான ரூ. 2,152 கோடி கல்வி நிதியை விடுவிக்க வேண்டும் என்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக அமைச்சர் தர்மேந்திர பிரதான் முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு இன்று கடிதம் எழுதியுள்ளார்.
'மாணவர்களின் நலனுக்காக கல்வியை அரசியலாக்க வேண்டாம். தேசிய கல்விக் கொள்கை, மொழி சுதந்திரத் தன்மை கொண்டது. எந்தவொரு மாநிலத்திலோ அல்லது சமுகத்திலோ எந்தவொரு மொழியையும் திணிக்கும் பேச்சுக்கே இடமில்லை. ஒவ்வொரு மாணவரும் தாய்மொழியில் தரமான கல்வி கற்பதை தேசிய கல்விக்கொள்கை உறுதி செய்கிறது.
பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்களும் தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொண்டுள்ளன. எனவே தமிழ்நாடும் தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்ள வேண்டும்' என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க | 'கல்வியை அரசியலாக்க வேண்டாம்' - முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு தர்மேந்திர பிரதான் கடிதம்!