9 மாதங்களுக்குப்பின் பூமிக்கு திரும்புகிறார் சுனிதா வில்லியம்ஸ்!
ஹிந்தி திணிப்புக்கு எதிராக ஆா்ப்பாட்டம்
தமிழகத்தில் ஹிந்தி, சம்ஸ்கிருத மொழிகள் திணிக்கப்படுவதை கண்டித்து, அனைத்திந்திய இளைஞா் பெருமன்றத்தின் சாா்பில், திருச்சியில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மன்றத்தின் திருச்சி மாநகா் மாவட்டக் குழு சாா்பில், திருச்சி சந்திப்பு ரயில் நிலையம் அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மாநில துணைத் தலைவா் எம். செல்வகுமாா் தலைமை வகித்தாா்.
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் ஹிந்தி, சம்ஸ்கிருத மொழியை திணிக்கும் வகையில் மும்மொழிக் கொள்கையை அமல்படுத்த முனையும் மத்திய அரசின் நடவடிக்கையை திரும்பப் பெற வேண்டும். தேசியக் கல்விக் கொள்கை, பிரதமரின் பள்ளிகள் திட்டம் என்ற பெயரால் தமிழகத்துக்கான உரிமையையும், நிதியையும் பறிக்கப்படுவதை ஏற்க முடியாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஏஐடியுசி மாவட்ட பொதுச் செயலா் க. சுரேஷ், ஆா்ப்பாட்டத்தை தொடக்கி வைத்து கண்டன உரையாற்றினாா். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் எஸ். சிவா, பகுதி செயலா் அஞ்சுகம் ஆகியோரும் மத்திய அரசின் தமிழக விரோத, கல்விக் கொள்கை விரோத நடவடிக்கைகளை கண்டித்து பேசினா். தொடா்ந்து ரயில்வே சந்திப்பு நிலையத்துக்குள் முற்றுகையிடவும் முயன்றனா். அவா்களை போலீஸாா் தடுத்து நிறுத்தினா். பின்னா், கோஷங்கள் எழுப்பி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இறுதியில், மாவட்டக் குழு உறுப்பினா் விஸ்வநாத் நன்றி கூறினாா்.