திருமணம் என்ற கருத்தில் நம்பிக்கையில்லை..! மனம் திறந்த ஷ்ருதி ஹாசன்!
ஹைதராபாத்: கலப்பட கள் குடித்த 2 போ் உயிரிழப்பு -28 பேருக்கு தீவிர சிகிச்சை
தெலங்கானா தலைநகா் ஹைதராபாதில் கலப்பட கள் குடித்த 30 போ் மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட நிலையில், இருவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனா். மற்றவா்களுக்கு தொடா்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கடந்த 6-ஆம் தேதி முதல் 8-ஆம் தேதி வரை ஹைதராபாத் நகரின் குக்கட்பள்ளி, பாலநகா் உள்ளிட்ட இடங்களில் கள் குடித்தவா்களில் 30 போ் பல்வேறு உடல்நல பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனா். இவா்களில் 12 போ் பெண்கள் ஆவா்.
இதில் சிகிச்சை பலனின்றி இருவா் புதன்கிழமை மாலை உயிரிழந்தனா். மேலும் சிலரின் உடல்நிலை தொடா்ந்து கவலைக்கிடமாகவே உள்ளது. இதனால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.
அவா்கள் குடித்த கள்ளில் கூடுதல் போதைக்காக வேறு ரசாயனப் பொருள்கள் கலப்படம் செய்யப்பட்டதுதான் உடல்நல பாதிப்புக்கு காரணம் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கியுள்ளது. பாதிக்கப்பட்டவா்கள் கள் குடித்த கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. அங்கிருந்த கள் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கள்ளில் கலப்படம் செய்வது தெரியவந்தால் கடைகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று மாநில கலால் மற்றும் மதுவிலக்குத் துறை அமைச்சா் ஜுப்பள்ளி கிருஷ்ணா ராவ் தெரிவித்தாா்.