'1,000 கிலோ அரிசியில் சாதம், 500 கிலோ காய்கறிகள்' - தஞ்சாவூர் பெரிய கோயில் பெருவுடையார் அன்னாபிஷேகம்
தஞ்சாவூர் பெரிய கோயில் உலகப்புகழ் பெற்றது. இங்கு பிரதோஷ தினத்தில் மகா நந்திக்கு சிறப்பு அபிஷேகம் செய்பட்டுவது வழக்கம். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொள்வார்கள். இதே போல் ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் பெளர்ணமி தினத்தில் அன்னாபிஷேகம் நடைபெறுவது வழக்கம். இதிலும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்வார்கள்.
இந்த நிலையில் ஐப்பசி பெளர்ணமி தினமான இன்று அன்னாபிஷேகம் நடைபெற்றது. இதற்காக பக்தர்கள் அரிசி, காய்கறிகள், பழங்கள் உள்ளிட்டவை காணிக்கையாக வழங்கினர். தஞ்சாவூர் பெரிய கோயில் மூலவரான பெருவுடையார் என அழைக்கப்படுகிற லிங்கம் 12 அடி உயரம், 54 அடி சுற்றளவும் கொண்ட ஒரே கல்லால் உருவாக்கப்பட்டது. அன்னாபிஷேகத்தில் சாதம் வடித்து பெருவுடையார் திருமேனியில் சாத்துவார்கள்.
இதற்காக கோயில் வளாகத்தில் 1,000 கிலோ பச்சரிசியில் சாதம் வடித்தனர். பின்னர் சாதத்தை பெருவுடையார் திருமேனி முழுவதும் சாத்தினர். இதையடுத்து காய்கறிகள் மற்றும் பழங்களால் அலங்காரம் செய்து அன்னாபிஷேகம் செய்தனர். இதைத் தொடர்ந்து பெருவுடையாருக்கு தீபாராதனைக் காண்பிக்கப்பட்டது. இதில், ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்றதுடன் பெருவுடையாரே என கோஷமிட்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதன் பின்னர் இரவு பெருவுடையாரிமிடரிந்து பிரித்தெடுக்கப்பட்ட அன்னம் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. மீதமுள்ள அன்னம், கால்நடைகளுக்கும், அருகில் உள்ள கல்லணைக் கால்வாயில் மீன் உள்ளிட்ட நீர் வாழ் உயிரினங்களுக்கு உணவாகப் போடப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை அரண்மனை தேவஸ்தானம், இந்து சமய அறநிலையத்துறையினர் செய்து இருந்தனர்.
இதே போல் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம், கங்கைகொண்ட சோழபுரம் சோழீஸ்வரர் கோயிலில் 40 ஆண்டுகளாக அன்னாபிஷேகம் நடைபெற்று வருகிறது. இங்குள்ள மூலவரான லிங்கம் பதிமூன்றரை அடி உயரமும், ஆவுடையார் 60 அடி சுற்றளவும் கொண்டது. இதற்கு சாத்துவதற்காக 100 மூட்டை அரிசியில் நீராவி கொதிகலன்கள் மூலம் சாதம் வடித்தனர். பின்னர் லிங்கத்திற்கு சாதம் சாத்தி அன்னாபிஷேகம் செய்தனர். இது குறித்து கோயில் வட்டாரத்தில் கூறுகையில், லிங்கத்தின் மீது சாத்தப்படும் ஒவ்வொரு சாதமும் லிங்கத்தின் தன்மையை பெறுகிறது.
அன்னாபிஷேகம் செய்யப்பட்ட லிங்கத்தை தரிசித்தால் கோடிக்கணக்கான லிங்கத்தை தரிசனம் செய்ததற்கான பலன்கள் கிடைப்பதாக ஐதீகம். எனவே தான் சிவாலங்களில் நடைபெறும் அன்னாபிஷேகம் சிறப்பு மிக்கதாக பார்க்கப்படுகிறது என்றனர். சிறப்பு மிக்க கங்கை கொண்ட சோழபுரம் கோயிலில் நடைபெற்ற அன்னாபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பின்னர் லிங்கத்திற்கு சாத்தப்பட்ட சாதத்தை எடுத்து பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கினர். மீதமிருந்த சாதத்தை ஆறு, ஏரி, குளங்களில் மீன்கள் சாப்பிடுவதற்காக போட்டனர். இதற்கான ஏற்பாட்டை காஞ்சி சங்கரமடம் மற்றும் இந்து சமய அறநிலையத்துறையினர் செய்திருந்தனர்.