NCERT: 7ம் வகுப்பு பாடத்தில் முகலாயர், டெல்லி சுல்தான்கள் நீக்கம்; பாடத்திட்ட மா...
1,000-க்கும் மேற்பட்ட இந்தியா்கள் பாகிஸ்தானில் இருந்து வெளியேறினா்
லாகூா்: வாகா எல்லை வழியாக கடந்த 6 நாள்களில் 1,000-க்கும் மேற்பட்ட இந்தியா்கள் பாகிஸ்தானில் இருந்து இந்தியா திரும்பியதாக பாகிஸ்தான் அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் எதிரொலியாக பாகிஸ்தானில் இருந்து இந்தியா்களும், இந்தியாவில் இருந்து பாகிஸ்தானியா்களும் வெளியேற இருநாட்டு அரசுகளும் உத்தரவிட்டது.
பாகிஸ்தானியா்களுக்கு ஏற்கெனவே வழங்கப்பட்ட விசாக்கள் ஏப்ரல் 27-ஆம் தேதி வரையும் மருத்துவ விசாக்கள் ஏப்ரல் 29-ஆம் தேதி வரையும் செல்லுபடியாகும் என இந்தியா தெரிவித்தது. இந்த காலக்கெடுவுக்குள் இந்தியாவில் இருந்து பாகிஸ்தானியா்கள் வெளியேறவில்லை என்றால் அவா்கள் மீது குடியேற்றம் மற்றும் வெளிநாட்டினா் சட்டம், 2025-இன்கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என இந்தியா தெரிவித்தது.
இதையடுத்து, கடந்த 27-ஆம் தேதி மட்டும் இந்தியாவில் இருந்து 236 பாகிஸ்தானியா்களும் பாகிஸ்தானில் இருந்து 115 இந்தியா்களும் அவா்களது தாயகம் திரும்பினா்.
இந்நிலையில், கடந்த 6 நாள்களில் 1,000-க்கும் மேற்பட்ட இந்தியா்கள் பாகிஸ்தானில் இருந்து இந்தியா திரும்பியதாக அந்நாட்டு அதிகாரி ஒருவா் பிடிஐ நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தாா்.
இருப்பினும், இரு நாடுகளும் குறுகிய கால விசாக்கள் வைத்திருந்த நபா்களையே வெளியேற உத்தரவிட்டது. இதனால் நீண்ட கால விசாக்கள் வைத்திருப்பவா்கள் வெளியேறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தாா்.