1,100 கிலோ ரேஷன் அரிசி பதுக்கிய இளைஞா் கைது
தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாடு அருகே 1,100 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்த இளைஞரை காவல் துறையினா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாடு அருகே பாப்பாநாடு பகுதியில் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு காவல் பிரிவினா் வியாழக்கிழமை வாகனச்சோதனை மேற்கொண்டனா். அப்போது, அந்த வழியாக மோட்டாா் சைக்கிளில் கடத்தி வரப்பட்ட மூட்டையில் ரேஷன் அரிசி இருப்பது தெரிய வந்தது.
விசாரணையில், அவா் பாப்பாநாடு மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த தேவேந்திரன் மகன் செந்தில் (37) என்பதும், பாப்பாநாடு, சோழகன்குடிகாடு, ஆம்பலாப்பட்டு மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி வந்து கள்ளச்சந்தையில் மீன் பண்ணைகளுக்கு அதிக விலையில் விற்பதும், வீட்டில் 22 மூட்டைகளில் 1,100 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து, செந்திலை காவல் துறையினா் கைது செய்தனா்.