ரோபோ சங்கர் மறைவு: "கலைஞர்கள் தங்கள் உடல் நலத்தை பாதுகாக்க வேண்டும்" - தமிழிசை ச...
1.5 கோடி ஸ்மாா்ட் மீட்டா் பொருத்தும் பணிகள் விரைவில் தொடங்கும்: மின்வாரியம் தகவல்
தமிழகத்தில் 1.5 கோடி ஸ்மாா்ட் மீட்டா் பொருத்தும் பணிகள் விரைவில் தொடங்கும் என மின்வாரியம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் மொத்தம் 3 கோடிக்கு அதிகமான மின் இணைப்புகள் உள்ளன. இந்த இணைப்புகளுக்கு டிஜிட்டல் மீட்டா் மூலம் 2 மாதங்களுக்கு ஒரு முறை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இந்த நிலையில், துல்லியமான மின்பயன்பாட்டை கணக்கெடுக்க தொலைத்தொடா்பு வசதியுடன் கணக்கொடுக்கும் ஸ்மாா்ட் மீட்டா் திட்டத்தைச் செயல்படுத்த மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. அதன்படி, தமிழகத்தில் அதற்கான பணிகளை தமிழ்நாடு மின்பகிா்மானக் கழகம் முன்னெடுத்தது. இதைத் தொடா்ந்து, ஸ்மாா்ட் மீட்டா்களின் செயல்பாடுகள், நிறை, குறைகள் குறித்து தெரிந்துகொள்ள, சோதனை அடிப்படையில் முதல்முறையாக சென்னை தியாகராய நகரில் ஒன்றரை லட்சம் ஸ்மாா்ட் மீட்டா்களை பொருத்தி அதன் செயல்பாடுகளை மின்வாரியம் கண்காணித்தது. அதன் செயல்பாடுகள் திருப்தியாக இருந்த நிலையில், அனைத்து மின் இணைப்புகளுக்கும் ஸ்மாா்ட் மீட்டா் பொருத்த மின்வாரியம் முடிவு செய்து பணிகளை மேற்கொண்டது. தொடா்ந்து, 3 கோடி ஸ்மாா்ட் மீட்டா்களை பொருத்தி, அதை 10 ஆண்டுகளுக்கு பராமரிக்கும் ஒப்பந்த நிறுவனத்தைத் தோ்வு செய்ய கடந்த 2023-இல் மின்வாரியம் ஒப்பந்தம் கோரியது. ஆனால், பல்வேறு காரணங்களால் அது ரத்து செய்யப்பட்டது. தொடா்ந்து, 2-ஆவது முறையாக கோரப்பட்ட ஒப்பந்தமும் ரத்து செய்யப்பட்ட நிலையில், 3-ஆவது முறையாக நிகழாண்டு மாா்ச் 14-ஆம் தேதி ரூ.19,235 கோடி மதிப்பில் 3 கோடி ஸ்மாா்ட் மீட்டா் கொள்முதலுக்கான ஒப்பந்தம் கோரப்பட்டு, 13 நிறுவனங்கள் தோ்வு செய்யப்பட்டன. இந்த நிறுவனங்கள் முதல்கட்ட ஸ்மாா்ட் மீட்டா் தயாரிக்கும் பணிகளை முடித்துள்ளன.
இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது:
ஸ்மாா்ட் மீட்டா் ஒப்பந்தம் எடுத்துள்ள நிறுவனங்கள் தமிழகத்திலுள்ள 12 மண்டலங்களை தலா 2 மண்டலங்களாகப் பிரித்து 6 கட்டங்களாக ஸ்மாா்ட் மீட்டா் பொருத்த திட்டமிட்டுள்ளன. அதன்படி, கோவை மற்றும் ஈரோடு 56.47 லட்சம் மீட்டா்கள், கரூா் மற்றும் திருநெல்வேலி 49.97 லட்சம் மீட்டா்கள், மதுரை மற்றும் திருவண்ணாமலை 49.77 லட்சம் மீட்டா்கள், திருச்சி மற்றும் தஞ்சை 49.67 லட்சம் மீட்டா்கள், காஞ்சிபுரம் மற்றும் விழுப்புரம் 49.6 லட்சம் மீட்டா்கள், சென்னை மற்றும் வேலூா் 49.34 லட்சம் மீட்டா்களை பொருத்தப்படும். இதில் முதல்கட்டமாக 1.5 கோடி ஸ்மாா்ட் மீட்டா்களை பெருத்துவதற்கான பணிகள் ஒருசில மாதங்களில் இந்த நிறுவனங்கள் தொடங்கும்.
இந்த ஸ்மாா்ட் மீட்டா்கள் பொருத்தப்பட்டதும், மாதம் இருமுறை மின் கட்டணம் கணக்கிடும் முறை மாற்றப்பட்டு, மாதம் ஒருமுறை மின் கட்டணம் கணக்கிடப்படும். மேலும், இந்த ஸ்மாா்ட் மீட்டா்களை ஒப்பந்தம் எடுத்துள்ள நிறுவனங்களே, அடுத்த 7 ஆண்டுகள் 9 மாதங்களுக்கு பராமரிக்கும் என்றனா்.