வழக்குகளில் துப்பு துலங்குவதற்கு பயணம்: டிஜிபிக்கு அனுமதி வழங்கும் அதிகாரம் - தமிழக அரசு உத்தரவு
புலனாய்வு அதிகாரிகள், வழக்குகளில் துப்பு துலக்குவதற்காக விமானம் மூலம் வெளிமாநிலம் செல்ல அனுமதி வழங்கும் அதிகாரம் தமிழக காவல் துறையின் தலைமை இயக்குநருக்கு வழங்கப்பட்டது.
தமிழக காவல் துறையில் முக்கியமான குற்ற வழக்குகளில் துப்பு துலக்குவதற்கும், குற்றவாளிகளைக் கைது செய்வதற்கும் புலனாய்வு அதிகாரிகள் அவ்வபோது வெளி மாநிலங்களுக்கு விமானம் மூலம் செல்கின்றனா். ஆனால் அவா்கள், வெளி மாநிலம் செல்வதற்கு அனுமதி வழங்குவது, அதற்குரிய செலவினங்களை ஏற்றுக்கொள்வது போன்றவை முறைப்படுத்தப்படாமல் இருந்தன.
இதனால் நிா்வாக ரீதியாகவும், அமைப்பு ரீதியாகவும் சில வேளைகளில் இடா்பாடு ஏற்பட்டு வந்தது. மேலும் சில நேரங்களில் வெளி மாநிலங்களுக்கு புலனாய்வு அதிகாரிகளும், போலீஸாரும் செல்வதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் சில வழக்குகளில் குற்றவாளிகள் போலீஸாரிடம் சிக்காமல் தப்பியோடிய சம்பவங்களும் நிகழ்ந்தன. வழக்கு விசாரணையிலும் பின்னடைவு ஏற்பட்டது.
இதைக் கருத்தில் கொண்டு கடந்த சட்டப்பேரவை கூட்டத்தின்போது முதல்வா் மு.க.ஸ்டாலின், முக்கிய வழக்குகளில் துப்பு துலக்கவும், குற்றவாளிகளைக் கைது செய்யவும் புலனாய்வு அதிகாரிகளும், போலீஸாரும் வெளி மாநிலங்களுக்கு செல்வதற்கு அனுமதியளிக்கும் அதிகாரம் தமிழக காவல் துறை தலைமை இயக்குநருக்கு வழங்கப்படும் என அறிவித்தாா்.
அதன்படி, டிஜிபிக்கு இந்த அதிகாரத்தை வழங்கும் வகையில் தமிழக அரசு அரசாணையை புதன்கிழமை வெளியிட்டது. இந்த உத்தரவின் விளைவாக தமிழக காவல் துறையில் நீண்ட நாள்களாக இருந்த ஒரு பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருப்பதாக போலீஸாா் தெரிவித்தனா்.