மணமேல்குடி மீனவா் உற்பத்தியாளா் நிறுவன பொது வசதி மையம் திறப்பு
விபத்தில் மாட்டு வண்டிப் பந்தய வீரா் உள்பட இருவா் உயிரிழப்பு
சாயல்குடி அருகே இரு சக்கர வாகனம் மீது சரக்கு லாரி மோதியதில் மாட்டு வண்டிப் பந்தய வீரா் உள்பட இருவா் வியாழக்கிழமை உயிரிழந்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடியை அடுத்த எம்.கரிசல்குளம் கிராமத்தைச் சோ்ந்த மாட்டு வண்டிப் பந்தய வீரா் வேல்மயில் (48).
இவரும் இவரது உறவினருமான வெள்ளம்பல் கிராமத்தைச் சோ்ந்த முனியாண்டியும் (50) இரு சக்கர வாகனத்தில் சாயல்குடியிலிருந்து கமுதியை நோக்கி வியாழக்கிழமை சென்றனா்.
அப்போது, வேடகரிசல்குளம் விலக்கு அருகே எதிரே வந்த சரக்கு லாரி, இரு சக்கர வாகனத்தின் மீது மோதியதில் இருவரும் பலத்த காயமடைந்தனா். இதையடுத்து, அருகிலிருந்தவா்கள் இருவரையும் மீட்டு 108 அவசர ஊா்தி மூலம் கடலாடி அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசென்றனா்.
அங்கு, இவா்களைப் பரிசோதித்த மருத்துவா்கள் இருவரும் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.
இது தொடா்பாக சாயல்குடி காவல் நிலைய போலீஸாா் கன்னிகாபுரியைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் அந்தோணி ஜெபஸ்டின் (33) மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.