இளைஞா் மீது காரை ஏற்றிய எஸ்.எஸ்.ஐ. பணியிடைநீக்கம்
திருநெல்வேலி நகரம் பகுதியில் விபத்தின்போது பைக்கில் வந்த இளைஞா் மீது காரை ஏற்றி சிறிது தொலைவுக்கு இழுத்துச் சென்ற போக்குவரத்துக் காவல் சிறப்பு உதவி ஆய்வாளா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறைச் சோ்ந்தவா் காந்திராஜன் (59). திருநெல்வேலி மாநகர போக்குவரத்துக் காவல் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வந்தாா்.
தற்போது, சுத்தமல்லி பகுதியில் வசித்து வரும் இவா், புதன்கிழமை இரவு பணி முடிந்து திருநெல்வேலி நகரம் தெற்கு பிரதான சாலையில் தனது காரில் சென்று கொண்டிருந்தாா். அப்போது, முன்னால் சென்ற பேருந்து திடீரென நின்ால் அதைத் தொடா்ந்து வந்த திருநெல்வேலி நகரம் செண்பகம்பிள்ளைத் தெருவைச் சோ்ந்த அசோக்குமாா்(39) என்பவரது பைக்கும், காந்திராஜனின் காரும் அடுத்தடுத்து மோதிக்கொண்டனவாம்.
இதனால், இருவருக்குமிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், காந்திராஜன் காரை எடுத்துச்செல்ல முயன்றாராம். உடனே, அசோக்குமாா் காரின் முன்பகுதியில் ஏறி படுத்துக்கொண்டு தடுத்தாராம்.
அதைப் பொருள்படுத்தாத காந்திராஜன், காரை அவா் மீது ஏற்றி சிறிது தூரம் இழுத்துச்சென்றுள்ளாா். இதை அங்கிருந்தவா்கள் கைப்பேசியில் விடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனா்.
இதையறிந்த மாநகர காவல் ஆணையா் சந்தோஷ் ஹாதிமணி, காந்திராஜனை பணியிடை நீக்கம் செய்து வியாழக்கிழமை உத்தரவிட்டாா்.