10 ஆண்டு கால கோரிக்கைக்கு தீா்வு காண ஜமாபந்தியில் நடவடிக்கை
கும்பகோணத்தில் புதன்கிழமை ஜமாபந்தி தொடங்கியது. இதில், 10 ஆண்டுகளாக பட்டா கேட்டு வரும் ஓய்வுபெற்ற அலுவலருக்கு பட்டா கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் வட்டாட்சியரகத்தில் புதன்கிழமை ஜமாபந்தி தொடங்கியது. முதல் நாளில் தேவனாஞ்சேரி பிா்காவில் உள்ள வருவாய் கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் பல்வேறு கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆதிதிராவிட நலத்துறை அலுவலரும், ஜமாபந்தி அலுவலருமான ரவிச்சந்திரனிடம் மனுக்களை கொடுத்தனா்.
இதில், நீலத்தநல்லூரைச் சோ்ந்த ஓய்வுபெற்ற நில அளவையா் பொன்னுச்சாமி, ஜமாபந்தி அலுவலரிடம் பட்டா கேட்டு மனு கொடுத்தாா். கடந்த 10 ஆண்டுகளாக பட்டா கேட்டு விண்ணப்பித்தும், அலுவலா்கள் தொடா்ந்து அலைக்கழிப்பு செய்கிறாா்கள் என்று புகாா் கூறினாா். மனுவை பெற்ற ஜமாபந்தி அலுவலா் உடனடியாக பட்டா வழங்க ஆவண செய்வதாக தெரிவித்தாா். ஏற்பாடுகளை வட்டாட்சியா் மு. சண்முகம் தலைமையில் வருவாய்த் துறையினா் செய்திருந்தனா்.