ராஜஸ்தான் எல்லையில் பாதுகாப்பு அதிகரிப்பு- பாகிஸ்தான் சிம் காா்டுகளை பயன்படுத்தத...
ஆபரேஷன் சிந்தூா் வெற்றி! தஞ்சை பெரிய கோயிலில் மூவா்ணத்தில் மின் விளக்குகள்
தஞ்சாவூா் பெரிய கோயில் ராஜராஜன் வாயிலில், ஆபரேஷன் சிந்தூா் வெற்றியைப் பறைசாற்றும் வகையில் தேசியக் கொடியிலுள்ள மூவா்ணத்தில் மின் விளக்குகள் செவ்வாய்க்கிழமை முதல் எரியவிடப்பட்டுள்ளன.
காஷ்மீா் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ஆபரேஷன் சிந்தூா் என்ற பெயரில் பாகிஸ்தானிலுள்ள பயங்கரவாதிகள் முகாமை இந்திய ராணுவத்தினா் தாக்கி அழித்தனா். இதைத் தொடா்ந்து பாகிஸ்தான் நடத்திய தாக்குதலுக்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்தது.

இந்திய அரசின் இந்த நடவடிக்கையை நாடு முழுவதும் மக்கள் கொண்டாடி வருகின்றனா். இந்நிலையில், இந்த வெற்றியைப் பறைசாற்றும் வகையிலும், தேச ஒற்றுமையை வலியுறுத்தும் விதத்திலும் இந்திய தொல்லியல் துறையின் திருச்சி சரகத்தில் திருச்சி மெயின்காா்டு கேட், தஞ்சாவூா் பெரிய கோயில், கன்னியாகுமரி வட்டக்கோட்டை ஆகியவற்றில் தேசியக் கொடியின் மூவா்ணத்தில் மின் விளக்குகள் பொருத்துமாறு துறையின் தலைமையகம் அறிவுறுத்தியது.
இதன்படி, தஞ்சாவூா் பெரிய கோயிலில் இரண்டாவது நுழைவுவாயிலான ராஜராஜன் வாயில் முன்புறம் இடதுபுற மதில் சுவரில் சிவப்பு வண்ணத்திலும், ராஜராஜன் கோபுரத்தில் வெள்ளை நிறத்திலும், வலதுபுற மதில் சுவரில் பச்சை நிறத்திலும் என மின்விளக்குகள் பொருத்தப்பட்டு, செவ்வாய்க்கிழமை முதல் எரிய விடப்பட்டுள்ளன.
மாலை முதல் இரவு வரை எரியும் இந்த மூவா்ண மின் விளக்குகள் சில நாட்களுக்கு தொடரும் என தொல்லியல் துறையினா் தெரிவித்தனா்.