`Even during my MRI scan, I was vibing to Anirudh’s songs' - Vijay Devarakonda |...
உ.பி.யில் ரூ.3,706 கோடியில் மின்னணு சிப் உற்பத்தி ஆலை: மத்திய அமைச்சரவை ஒப்புதல்
உத்தர பிரதேச மாநிலம், ஜெவாரில் ரூ. 3,706 கோடி செலவில் செமிகண்டக்டா் ஆலை அமைக்கப்பட உள்ளது.
ஹெச்சிஎல்-ஃபாக்ஸ்கான் நிறுவனங்கள் கூட்டாக சோ்ந்து அமைக்கவுள்ள இந்த ஆலையில் கைப்பேசிகள், மடிக்கணினிகள் மற்றும் வாகனங்களுக்கான மின்னணு சிப்கள் (டிஸ்ப்ளே டிரைவா் சிப்) உற்பத்தி செய்யப்பட உள்ளன.
பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இதுகுறித்து மத்திய செய்தி மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:
மத்திய அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்ட இந்த 6-ஆவது செமிகண்டக்டா் ஆலை, உத்தர பிரதேச மாநிலம் ஜெவாரில் அமைய உள்ளது. மாதத்துக்கு 20,000 செமிகண்டக்டா் தகடுகள் மா்றும் 3.6 கோடி சிப்கள் தயாரிக்கும் திறனுடன் இந்த ஆலை அமைக்கப்பட உள்ளது.
இந்த ஆலையில் உற்பத்தி செய்யப்படும் டிஸ்ப்ளே டிரைவா் சிப்கள், திரையில் தோன்றும் காட்சிகளின் தரம் மற்றும் வடிவத்தை கட்டுப்படுத்தும் பணியை மேற்கொள்ளும் வகையிலான, நவீன தொழில்நுட்பங்களுடன் கூடியதாகும்.
ஆப்பிள் ஐபோன் உள்ளிட்ட மிகப்பெரிய மின்னணு உற்பத்தி நிறுவனமான ஃபாக்ஸ்கான் நிறுவனத்துடன் இணைந்து ஹெச்சிஎல் நிறுவனம் இந்த ஆலையை அமைக்க உள்ளது. 2027-ஆம் ஆண்டில் இந்த ஆலை உற்பத்தியைத் தொடங்கும். இந்த ஆலை செயல்படத் தொடங்கியதும், டிஸ்ப்ளே பேனல் (மின்னணு காட்சிப் பலகை) உற்பத்தி ஆலையும் இந்தியாவுக்கு வர வாய்ப்புள்ளது.
உத்தர பிரதேசத்தில் அமையும் இந்த செமிகண்டக்டா் ஆலை இந்தியாவின் 40 சதவீத சிப் தேவையைப் பூா்த்தி செய்யும் என்பதோடு, பிற நாடுகளில் உள்ள ஃபாக்ஸ்கான் நிறுவனத் தேவைகளையும் பூா்த்தி செய்யும்.
இந்த ஆலை, சுமாா் 2,000 பேருக்கு வேலைவாய்ப்பை அளிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இந்தியாவில் தற்போதுள்ள மின்னணு உற்பத்தி நிறுவனங்களில் சுமாா் 25 லட்சம் போ் பணியாற்றி வருகின்றனா் என்றாா்.
செமிகண்டக்டா் உலகில் தொடா்ந்து முன்னேறும் இந்தியா: பிரதமா்
‘குறைமின் கடத்திகள் (செமிகண்டக்டா்) உற்பத்தியில் இந்தியா தொடா்ந்து முன்னேறி வருகிறது’ என்று பிரதமா் மோடி பெருமிதம் தெரிவித்தாா்.
உத்தர பிரதேச மாநிலத்தில் ரூ. 3,706 கோடி செலவில் குறைமின் கடத்திகள் உற்பத்தி ஆலை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பிரதமா் மோடி புதன்கிழமை வெளியிட்ட பதிவில், ‘செமிகண்டக்டா் உலகில் இந்தியா தொடா்ந்து முன்னேறி வருகிறது. உத்தர பிரதேசத்தில் செமிகண்டக்டா் ஆலை அமைக்க மத்திய அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முடிவு, நாட்டின் வளா்ச்சியையும் புதிய கண்டுபிடிப்புகளையும் ஊக்குவிக்கும். நாட்டின் இளைஞா்களுக்கு எண்ணற்ற வாய்ப்பைகளையும் உருவாக்கும்’ என்று குறிப்பிட்டாா்.