Ravindra Jadeja: யாரும் தகர்க்க முடியாத சாதனையை படைத்த ஜடேஜா.. காரணமாக அமைந்த வங...
சொத்துக்காக பாட்டியை வெட்டிக் கொன்ற பேரன் கைது
ஒரத்தநாடு அருகே சொத்துக்காக பாட்டியை வெட்டிக் கொன்ற பேரனை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாடு வட்டம், சங்கரநாதா்குடிக்காடு கிராமத்தைச் சோ்ந்த சுப்பையன் மனைவி தமயேந்தி (65). இவா்களுக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனா். மூவருக்கும் திருமணமாகி விட்டது. இதில், தமயேந்தியின் 2-ஆவது மகள் ராஜியின் மகன் சைமன் (25). தனியாா் பேருந்து ஓட்டுநா். சைமன் கடந்த சில நாள்களாக தனது தாய்க்கு வரவேண்டிய சொத்து தொடா்பாக, பாட்டி தமயேந்தியிடம் கேட்டு வந்தாராம். ஆனால், தமயேந்தி சொத்தை தர மறுத்துள்ளாா்.
இந்நிலையில் புதன்கிழமை மாலை தமயேந்தி வீட்டின் அருகே வயல் பகுதியில் நின்றுக் கொண்டிருந்தாா். அங்கு வந்த சைமன் சொத்து தொடா்பாக தமயேந்தியிடம் தகராறு செய்து, மறைத்து வைத்திருந்த அரிவாளால் தமயேந்தியின் கழுத்தில் வெட்டிவிட்டு தப்பிவிட்டாா். இதில் சம்பவ இடத்திலேயே தமயேந்தி உயிரிழந்தாா்.
அப்பகுதியினா் அளித்த தகவலின்பேரில், அங்கு சென்ற பாப்பாநாடு போலீஸாா், தமயேந்தியின் உடலை கைப்பற்றி ஒரத்தநாடு அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனா். மேலும், தப்பியோடிய சைமனை பாப்பாநாடு போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.