யூ டியூப் சேனல்களுக்கும் உரிமம் கட்டாயம்: கர்நாடக அரசு பரிசீலனை
10 வருட காதலுக்குப் பெண் வீட்டார் எதிர்ப்பு; இளைஞர் ஆணவப் படுகொலை - மயிலாடுதுறையில் நடந்தது என்ன?
மயிலாடுதுறை அருகே உள்ள அடியமங்கலம் பெரிய தெருவில் வசிப்பவர் குமார். இவருக்கு வைரமுத்து (28) என்ற மகனும் இரு மகள்களும் உள்ளனர்.
வைரமுத்து டூவீலர் மெக்கானிக். அதே பகுதியைச் சேர்ந்தவர் 26 வயது இளம் பெண். பட்டியலினத்தைச் சேர்ந்த இருவரும் கடந்த 10 ஆண்டுகளாகக் காதலித்துள்ளனர்.
இளம் பெண் சென்னையில் வேலை பார்த்து வருகிறார். இவர்களது காதலுக்கு இளம் பெண்ணின் அம்மா விஜயா எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார்.
மேலும் வைரமுத்துவிடம், என் மகளை விட்டுவிடு எனத் தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார். இதனால் இரு குடும்பங்களுக்கும் இடையே பிரச்னை இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில் விஜயா, வைரமுத்து வேலை பார்க்கக்கூடிய டூவீலர் ஒர்க்ஷாப்பிற்குச் சென்று வைரமுத்துவை மரியாதைக் குறைவாகப் பேசியிருக்கிறார்.
அப்போது இரு குடும்பத்துக்குமான அந்தஸ்து தொடர்பாகச் சொல்லிவிட்டு வந்திருக்கிறார். அத்துடன், மயிலாடுதுறை காவல் நிலையத்தில் இளம் பெண்ணின் குடும்பத்தார் புகார் அளித்துள்ளனர்.
இதையடுத்து, இரு தரப்பையும் அழைத்து போலீஸார் விசாரித்துள்ளனர். அப்போது இளம் பெண் வைரமுத்துவுடன் செல்வதாகக் கூறிவிட்டார்.
வைரமுத்து குடும்பத்தாருடன் இளம் பெண்ணும் இருந்துள்ளார். இந்த நிலையில், இளம் பெண் நேற்று இரவு வேலைக்காக சென்னைக்குக் கிளம்பினார்.
வைரமுத்து அவரை அனுப்பிவிட்டு மீண்டும் ஊருக்கு வந்துள்ளார். அடியக்கமங்கலம் பிள்ளையார் கோயில் தெருவில் சென்றுகொண்டிருந்தபோது, அவரை மர்ம நபர்கள் வழிமறித்து தாக்கியுள்ளனர்.
அவர்களிடமிருந்து தப்பித்து ஓடியவரை ஓட ஓட விரட்டிச் சென்று மர்ம நபர்கள் கொலை செய்தனர். இந்தச் சம்பவம் மயிலாடுதுறை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த ஆணவக் கொலைக்கு எதிராகப் பலரும் குரல் எழுப்பிக் கண்டனத்தைப் பதிவு செய்தனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் அறிக்கை வெளியிட்டார்.
சமூக ஊடகங்களிலும் ஆணவக்கொலைக்கு எதிராக பலரும் கருத்துகளைப் பதிவிட்டு வந்தனர்.
வைரமுத்துவின் குடும்பத்தினர், விஜயா குடும்பத்தினர் இந்தக் கொலையைச் செய்ததாகக் குற்றம் சாட்டினர். வைரமுத்துவின் அம்மா ராஜலட்சுமி உள்ளிட்டோர் கதறி அழுதது சோகத்தை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக மாவட்ட எஸ்.பி ஸ்டாலின் தலைமையில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். கொலையாளிகளைப் பிடிப்பதற்காகத் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், வைரமுத்து வேலை செய்த கடைக்குச் சென்ற விஜயா, "ஒழுங்கா என் பொண்ணை விட்டு விடு, இல்லைன்னா உனக்கு என்ன ஆகும்னு தெரியாது" என மிரட்டியுள்ளார்.
ஆனால் வைரமுத்து இதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை எனச் சொல்லப்படுகிறது. மேலும் வைரமுத்துவும் அவரது காதலியும் பதிவுத் திருமணம் செய்வதற்கு ஏற்பாடு செய்து வந்துள்ளனர். இந்த நிலையில்தான் மயிலாடுதுறையை உலுக்கும் இந்தக் கொலை அரங்கேறியுள்ளது.
இது குறித்து சிலரிடம் பேசினோம், வைரமுத்துவும், இளம் பெண்ணும் பத்து வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். இளம் பெண்ணின் குடும்பம் பொருளாதார ஏற்றத்தாழ்வு பார்த்துள்ளனர்.
இதனால் வைரமுத்துவைக் கண்டாலே அவர்களுக்கு ஆகாமல் இருந்துள்ளனர். வைரமுத்துவும் ஒரே சாதிதானே எப்படியும் திருமணம் செய்து கொடுத்து விடுவார்கள் என்கிற நம்பிக்கையில் இருந்துள்ளார்.
ஆனால் ஆணவப் படுகொலை செய்கிற அளவிற்குச் செல்வார்கள் என யாரும் நினைக்கவில்லை.

இது குறித்து கொலை செய்யப்பட்ட வைரமுத்து உறவினர்கள், காதலி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விசிக, தீண்டாமை ஒழிப்பு முன்னணி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, விஜயா மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும். அதுவரை வைரமுத்து உடலை வாங்க மாட்டோம் என்றனர்.
இளம் பெண்ணின் சகோதரர்கள் மற்றும் இவர்களது நண்பர்கள் வைரமுத்துவை கொலை செய்திருப்பதை போலீஸார் விசாரணையில் உறுதி செய்து, கைது செய்துள்ளனர்.