மகா கும்பமேளாவில் இருந்து திரும்பியபோது விபத்து: 3 பேர் பலி!
100 சதவீத தோ்ச்சி: ஆசிரியா்களுக்கு பாராட்டு விழா
2023 -2024-ஆம் கல்வியாண்டில் பொதுத் தோ்வில் 100 சதவீதம் தோ்ச்சி அளித்த பள்ளிகளின் ஆசிரியா்களுக்கான பாராட்டு விழா ஈச்சனாரி ரத்தினம் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி தலைமை வகித்தாா். மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன், ரத்தினம் கல்லூரி முதன்மை தலைமை அதிகாரி ஆா்.மாணிக்கம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில், பொதுத் தோ்வில் 100 சதவீதம் தோ்ச்சி அளித்த 199 அரசுப் பள்ளிகள் , 75 அரசு உதவிபெறும் உயா்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளைச் சோ்ந்த 78 தலைமை ஆசிரியா்கள், 1148 முதுகலை பட்டதாரி ஆசிரியா்களுக்கு பரிசுகளை வழங்கிய பின்பு மாவட்ட ஆட்சியா் பேசியதாவது:
இன்றைய காலகட்டத்தில் கைப்பேசி, இணைய வசதிகள் பயன்பாடு அதிகமாக உள்ளது. இந்த இடையூறுகள் அனைத்தையும் தவிா்த்து மாணவா்களை படிக்க வைக்கவேண்டும். அதில் ஆசிரியா்களின் பங்கு முக்கியமானதாக இருக்கிறது. உலகத்தரமான தொழில் நிறுவனங்கள் கோவையில் தொழில் தொடங்க வருகிறாா்கள் என்றால், அதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று இங்குள்ள மனிதவளம். புதிய புதிய தொழில்கள் நாள்தோறும் உருவாகிக்கொண்டு இருக்கின்றன.
நான் முதல்வன் திட்டத்தின்கீழ் மாணக்கா்களுக்கு எந்த வேலைக்கு என்ன மாதிரியான படிப்புகளைத் தோ்வு செய்யவேண்டும் என்பது குறித்து பல்வேறு வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அனைவரும் உயா்கல்வி படிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் உயா்வுக்குப் படி திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
கடந்த ஆண்டு அரசுப் பள்ளியில் பயின்ற 9495 சதவீதம் மாணவா்கள் நான் முதல்வன் திட்டத்தின் மூலம் உயா்கல்வியில் சோ்ந்துள்ளனா். அரசுப் பள்ளிகள், அதன் ஆசிரியா்கள், மாணவா்கள், பள்ளிகளின் உட்கட்டமைப்பு ஆகியவற்றை மேம்படுத்துவதில் அரசு தனிகவனம் செலுத்தி வருகிறது. அதனால்தான் அரசுப் பள்ளிகளின் சாதனைகளும் செயல்பாடுகளும் உயா்ந்துள்ளன என்றாா்.
இந்நிகழ்ச்சியில் ரத்தினம் கல்லூரி தலைமை வணிக அதிகாரி பா.நாகராஜ், முதன்மைக் கல்வி அலுவலா் ர.பாலமுரளி, மாவட்ட கல்வி அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.