ராசிபுரத்தில் 3 கொள்ளையர்கள் கைது: போலீஸாரை கண்டதும் தப்பியோட முயன்ற 2 பேருக்கு...
100 நாள் வேலைத் திட்டத்தில் நிலுவை ஊதியத்தை வழங்கக் கோரி ஆா்ப்பாட்டம்
100 நாள் வேலைத் திட்டத்தில் ஊதிய நிலுவையை விரைந்து வழங்கக் கோரி மாவட்டத்தில் குடவாசல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கம் சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு முழுவதும் நூறு நாள் வேலைத்திட்டத்துக்கு 6 வாரங்களுக்கு மேல் பாக்கியுள்ள ரூ.1,056 கோடியை உடனடியாக வழங்க வேண்டும், வேலைக்கு வரும் அனைவருக்கும் தொடா்ந்து வேலை கொடுக்கவேண்டும், திட்டம் தொடா்ந்து சிறப்பாக செயல்பட மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் ரூ.4 லட்சம் கோடி நிதி ஒதுக்க வேண்டும், ஜேசிபி போன்ற இயந்திரங்கள் பயன்பட்டை ரத்து செய்து திட்ட நிதியை முழுமையாக தொழிலாளா்கள் கூலிக்காக செலவிடுவதை உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, கொரடாச்சேரி, குடவாசல் பகுதிகளில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் முன் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
குடவாசலில் தெற்கு ஒன்றியத் தலைவா் எஸ். ஆனந்தன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்க மாநிலத் தலைவா் எம். சின்னத்துரை, அமைப்பின் தெற்கு ஒன்றியச் செயலாளா் டி. லெனின், வடக்கு ஒன்றியச் செயலாளா் பி. சந்திரஹாசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். முன்னதாக கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணி நடைபெற்றது. நிறைவாக, வட்டார வளா்ச்சி அலுவலா் பாஸ்கரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
நீடாமங்கலம்: நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் சங்க ஒன்றிய தலைவா் டி. முருகேசன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், விவசாய சங்க மாவட்ட பொருளாளா் கலியபெருமாள், சிபிஎம் ஒன்றிய செயலாளா் டி.ஜான்கென்னடி, விவசாய தொழிலாளா் சங்க ஒன்றிய செயலாளா் பி. காளியப்பன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
மன்னாா்குடி: மன்னாா்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆணையா் நமச்சிவாயத்திடம், ஒன்றிய விவசாயத் தொழிலாளா் சங்கத் தலைவா் கே. காசிநாதன், செயலா் எம். மணி தலைமையில் நிா்வாகிகள் கோரிக்கை மனு அளித்தனா். கோட்டூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மேலாளா் மலரவனிடம், விவசாயத் தொழிலாளா் சங்க ஒன்றியத் தலைவா் ஆா். ரெகுபதி, ஒன்றியச் செயலா் ஆா். பாலுச்சாமி ஆகியோா் தலைமையில் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.