திருச்சி- தில்லிக்கு நேரடி விமானச் சேவை தொடக்கம்: முதல் நாளில் 76 போ் பயணம்
102 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸி.யை வீழ்த்தி இந்தியா அபாரம்; சமனில் ஒருநாள் தொடர்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 102 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி சண்டீகரில் இன்று (செப்டம்பர் 17) நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, இந்திய அணி முதலில் பேட் செய்தது.
ஸ்மிருதி மந்தனா சதம், இந்தியா அபார வெற்றி
முதலில் விளையாடிய இந்திய அணி 49.5 ஓவர்களில் 292 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இந்திய அணியின் துணைக் கேப்டன் ஸ்மிருதி மந்தனா சதம் விளாசி அசத்தினார். அவர் 91 பந்துகளில் 117 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 14 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, தீப்தி சர்மா 40 ரன்களும், ரிச்சா கோஷ் 29 ரன்களும் எடுத்தனர்.
ஆஸ்திரேலியா தரப்பில் டார்ஸி பிரௌன் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஆஷ்லே கார்டனர் 2 விக்கெட்டுகளையும், மேகன் ஷுட், அன்னாபெல் சதர்லேண்ட் மற்றும் தஹிலா மெக்ராத் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
293 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, 40.5 ஓவர்களில் 190 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம், இந்திய அணி 102 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக அன்னாபெல் சதர்லேண்ட் 45 ரன்களும், எல்லிஸ் பெர்ரி 44 ரன்களும் எடுத்தனர். அவர்களைத் தொடர்ந்து, பெத் மூனி (18 ரன்கள்), ஆஷ்லே கார்டனர் (17 ரன்கள்), தஹிலா மெக்ராத் (16 ரன்கள்) எடுத்து ஆட்டமிழந்தனர்.
இந்தியா தரப்பில் கிராந்தி கௌத் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். தீப்தி சர்மா 2 விக்கெட்டுகளையும், ரேனுகா சிங், ஸ்நே ராணா, அருந்ததி ரெட்டி மற்றும் ராதா யாதவ் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் விளாசிய ஸ்மிருதி மந்தனாவுக்கு ஆட்டநாயகி விருது வழங்கப்பட்டது.
இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி 1-1 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி வருகிற செப்டம்பர் 20 ஆம் தேதி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
India won the second ODI against Australia by a massive margin of 102 runs.
இதையும் படிக்க: நடுவரை நீக்கும் கோரிக்கையை மீண்டும் நிராகரித்த ஐசிசி; ஆசிய கோப்பையில் பாகிஸ்தான் தொடருமா?