உரிய ஆவணங்களின்றி இயங்கிய ஆட்டோக்கள் பறிமுதல்
சிதம்பரத்தில் உரிய ஆவணங்களின்றி இயக்கப்பட்ட 4 ஆட்டோக்கள், ஒரு சரக்கு வாகனம் ஆகியவற்றை வட்டார போக்குவரத்து அலுவலா்கள் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.
சிதம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலா் செல்வம், மோட்டாா் வாகன ஆய்வாளா் ரவிச்சந்திரன் ஆகியோா் சிதம்பரம் நகரின் பல்வேறு இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது, ஓட்டுநா் உரிமம், காப்பீட்டு உரிமம், வாகன அனுமதி உள்ளிட்ட உரிய ஆவணங்களின்றி இயக்கப்பட்ட 4 ஆட்டோக்களை அவா்கள் பறிமுதல் செய்தனா். மேலும், ஒரு சரக்கு வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னா், இந்த வாகனங்களை சிதம்பரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு கொண்டு சென்று நிறுத்தினா்.
மேலும், உரிய ஆவணங்களின்றி வாகனங்கள் இயக்கப்பட்டால் பறிமுதல் செய்யப்படும் எனவும், வாகனங்களில் காற்று ஒலிப்பான்களை பயன்படுத்தக் கூடாது எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனா். மேலும், அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டுமே பேருந்துகளை இயக்க வேண்டும். குறிப்பாக, சிதம்பரம் புறவழிச் சாலையில் பேருந்துகளை இயக்கினால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனா்.