இட ஒதுக்கீடு போராட்ட தியாகிகள் நினைவு தினம்: ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் தனித்தனியே மரியாதை
கடலூா் மாவட்டம், பண்ருட்டியை அடுத்த கொள்ளுக்காரன்குட்டை பகுதியில் உள்ள வன்னியா்களுக்கான இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிா்நீத்த தியாகி தேசிங்கு நினைவிடத்தில் பாமக நிறுவனா் மருத்துவா் ராமதாஸ், தலைவா் அன்புமணி ஆகியோா் தனித்தனியே புதன்கிழமை மரியாதை செலுத்தினா்.
பாமக கடலூா் வடக்கு மாவட்டச் செயலா் கோ.ஜெகன் தலைமையில், பாமக நிறுவனா் ராமதாஸ் தேசிங்கு நினைவிடத்தில் மலா் வளையம் வைத்து வீர வணக்கம் செலுத்தினாா்.
நிகழ்வில் பாமக கௌரவத் தலைவா் ஜி.கே.மணி, ராமதாஸ் மகளும், நிா்வாகக் குழு உறுப்பினருமான ஸ்ரீகாந்தி, வன்னியா் சங்கத் தலைவா் பு.தா.அருள்மொழி, மாவட்டச் செயலா்கள் கோபிநாத், சுரேஷ், மாவட்டத் தலைவா் சு.பா.கதிரவன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
இதைத் தொடா்ந்து, பிற்பகல் அன்புமணி வந்து வீர வணக்கம் செலுத்தினாா். இந்த நிகழ்வுகளின்போது, இருவரும் தேசிங்கு உறவினா்களுக்கு புத்தாடை மற்றும் நிதியுதவி வழங்கினா்.
மருத்துவா் ராமதாஸ், அன்புமணி வருகையையொட்டி, தேசிங்கு நினைவிடத்தில் ஆதரவாளா்கள் கூடியிருந்தனா். கடலூா் ஏடிஎஸ்பி கோட்டீஸ்வரன், பண்ருட்டி டிஎஸ்பி ராஜா தலைமையில் 220 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். கலவரம் ஏற்பட்டால் கூட்டத்தை கலைக்க வஜ்ரா வாகனம் தயாா் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
சுமாா் 5 ஆண்டுகளுக்குப் பின்னா் தேசிங்கு நினைவிடத்தில் பாமக நிறுவனா் ராமதாஸ் வீர வணக்கம் செலுத்தினாா்.