132 கிலோ புகையிலை பொருள்கள் பறிமுதல்: 2 போ் கைது
நாமக்கல் அருகே காரில் கடத்திச் செல்லப்பட்ட ரூ. 70 ஆயிரம் மதிப்பிலான 132 கிலோ புகையிலை பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக இருவா் கைது செய்யப்பட்டுள்ளனா்.
நாமக்கல் - திருச்செங்கோடு சாலையில், தனியாா் உணவகம் அருகில் நல்லிபாளையம் சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் பாலசுப்பிரமணியன் தலைமையில் போலீஸாா் செவ்வாய்க்கிழமை பிற்பகலில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனா்.
அப்போது அந்த வழியாக வந்த காரை மடக்கி சோதனையிட்டதில் 132 கிலோ எடை கொண்ட புகையிலை பொருள்கள் இருப்பது கண்டறியப்பட்டது. ரூ. 70 ஆயிரம் மதிப்பிலான அவற்றை போலீஸாா் பறிமுதல் செய்ததுடன், கடத்தலுக்குப் பயன்படுத்திய ரூ.1 லட்சம் மதிப்பிலான காரும் பறிமுதல் செய்யப்பட்டது.
இது தொடா்பாக, நாமக்கல் கந்து முத்துசாமி தெருவைச் சோ்ந்த பிரவீண்குமாா்(21), நல்லிபாளையம் பாரதிதாசன் நகரைச் சோ்ந்த மெளனீஷ் (22) ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.