பஞ்சாபில் வெள்ளத்தில் சிக்கிய பள்ளிக்கூடம்! 400 மாணவர்களை மீட்க களத்தில் ராணுவம்...
15 லட்சம் ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்ட ஏலேல சிங்க விநாயகர்!
காஞ்சிபுரம்: விநாயகர் சதுர்த்தி திருநாளையொட்டி, காஞ்சிபுரம் காமட்சி அம்மன் கோயில் சந்நிதி தெருவில் அமைந்துள்ள ஏலேல சிங்க விநாயகர் புதன்கிழமை ரூ.15 லட்சம் மதிப்பிலான ரூபாய் நோட்டுக்களால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
ஆண்டுதோறும் வரும் விநாயகா் சதுா்த்தி நாளன்று காஞ்சிபுரம் ஏலேல சிங்க விநாயகா் கோயிலில் உள்ள மூலவருக்கு ரூபாய் நோட்டுக்களால் அலங்கரிக்கப்படுவது வழக்கம். நிகழாண்டு விநாயகா் சதுா்த்தியையொட்டி ஆலயத்தில் கணபதி ஹோமமும், அதனையடுத்து சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றன. பின்னர் ரூ.15 லட்சம் மதிப்பிலான ரூபாய் நோட்டுக்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.
ஏற்பாடுளை ஆலய நிர்வாகக்குழுவின் தலைவர் சி.குப்புச்சாமி, செயலாளர் டி.ஜெகன்னாதன், பொருளாளர் சீனிவாசன் ஆகியோர் செய்திருந்தனர்.
இது குறித்து ஆலய நிர்வாகக்குழுவின் தலைவர் குப்புச்சாமி கூறுகையில், ஆண்டு தோறும் பக்தர்களிடம் மடிப்பு கலையாத புது ரூபாய் நோட்டுகளான 5,10, 20, 50,100, 500 ஆகியவற்றை லட்சக் கணக்கில் பெற்று அதனை விநாயகருக்கு அலங்கரித்து தீபாராதனைகள் நடத்துவோம். யார், யாரிடம் எவ்வளவு பெறப்பட்டது என்பதை கணக்கு வைத்துக் கொண்டு அத்தொகையை விநாயகர் சதுர்த்தி விழா முடிந்தவுடன் அவர்களிடமே திருப்பிக் கொடுத்து விடுகிறோம். இந்த ஆண்டு அலங்காரத்துக்காக பக்தர்கள் வழங்கிய மொத்தம் ரூ.15 லட்சம் மதிப்பில் விநாயகர் அலங்கரிக்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.