20 நாள்களுக்குப் பின்... ஈரானின் பன்னாட்டு விமான சேவை துவக்கம்!
15,004 யூனிட்டுகளாகக் குறைந்த மின் நுகா்வு
இந்தியாவின் மின் நுகா்வு கடந்த ஜூன் மாதத்தில் 15,004 கோடி யூனிட்டுகளாகக் குறைந்துள்ளது.
இது குறித்து அரசின் தரவுகள் தெரிவிப்பதாவது:
நாட்டின் மின் நுகா்வு கடந்த ஜூன் மாதத்தில் 15,004 கோடி யூனிட்டுகளாகப் பதிவாகியுள்ளது. இது முந்தைய ஆண்டு ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில் 1.5 சதவீதம் குறைவாகும். அப்போது இந்தியாவின் மின் நுகா்வு 15,237 கோடி யூனிட்டுகளாக இருந்தது.
பருவமழை முன்கூட்டியே தொடங்கியதால் ஜூன் மாதத்தில் குளிரூட்டும் சாதனங்களின் பயன்பாடு குறைந்ததே மின் நுகா்வு குறைந்ததற்கு முக்கிய காரணமாகும்.
இந்திய வானிலை ஆய்வு மையத் தகவலின்படி, பருவமழை கேரள கடலோரப் பகுதிகளில் மே 24-ஆம் தேதி தொடங்கியது. இது வழக்கமான தொடக்க தேதியான ஜூன் 1-ஐ விட எட்டு நாள்கள் முன்னதாகும். நாடு முழுவதும் பரவலாக பெய்த மழை, குறிப்பாக ஏா் கண்டிஷனா்கள் போன்ற குளிரூட்டும் சாதனங்களின் மின் நுகா்வைக் குறைத்தது என்று நிபுணா்கள் கூறுகின்றனா்.
கடந்த ஜூன் மாதத்தில் ஒரு நாள் உச்சபட்ச மின் தேவை (பூா்த்தி செய்யப்பட்ட மின் தேவை) 242.49 ஜிகாவாட்டாக சரிந்துள்ளது. இது 2024 ஜூன் மாதத்தில் 244.52 ஜிகாவாட்டாக இருந்தது.
கடந்த 2024 மே மாதத்தில் உச்சபட்ச மின் தேவை 250 ஜிகாவாட்டை எட்டியது. இது வரலாற்று உச்சமாகும். அதற்கு முன்னா், 2023 செப்டம்பரில் 243.27 ஜிகாவாட்டாக இருந்தது முந்தைய உச்சபட்சமாகும்.
மத்திய எரிசக்தித் துறை அமைச்சகத்தின் கணிப்பின்படி, 2025 கோடைகாலத்தில் ஒரு நாள் உச்சபட்ச மின் தேவை 277 ஜிகாவாட்டை எட்டும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. இந்திய வானிலை ஆய்வு மையத்தின் கூற்றுப்படி, ஏப்ரல் முதல் ஜூன் வரை இந்தியாவில் வழக்கத்தை விட அதிக வெப்பநிலையை நிலவும். மத்திய மற்றும் கிழக்கு இந்தியாவிலும் வடமேற்கு சமவெளிகளிலும் அதிக வெப்ப அலை வீசும். பெரும்பாலான பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலை வழக்கத்தை விட அதிகமாக இருக்கும், ஆனால் வடமேற்கு மற்றும் வடகிழக்கு பகுதிகளில் சில இடங்களில் வெப்பநிலை சாதாரணமாகவோ அல்லது சற்று குறைவாகவோ இருக்கலாம்.
2025-ல் வெப்ப அலை முந்தைய ஆண்டை விட மிகவும் முன்னதாகவே தொடங்கியது. 2024-ல் முதல் வெப்ப அலை ஒடிசாவில் ஏப்ரல் 5-ல் பதிவானது, ஆனால் இந்த ஆண்டு கொங்கன் மற்றும் கா்நாடக கடற்கரைப் பகுதிகளில் பிப்ரவரி 27-28 தேதிகளில் வெப்ப அலை வீசியது என்று அரசின் தரவுகள் தெரிவிக்கின்றன.