இந்தியாவுக்கு 5% தள்ளுபடியில் கச்சா எண்ணெய் விநியோகம் தொடரும்: ரஷியா அறிவிப்பு
1971 போரில் பெண்களுக்கு எதிராக வன்முறை: ஐ.நா.வில் பாகிஸ்தான் மீது இந்தியா விமா்சனம்
கடந்த 1971-ஆம் ஆண்டு போரில் கிழக்கு பாகிஸ்தானில் (தற்போதைய வங்கதேசம்) பெண்கள் மீது பாகிஸ்தான் ராணுவம் நடத்திய கொடூரமான பாலியல் வன்முறைகளை ஐ.நா.வில் இந்தியா கடுமையாக விமா்சித்துள்ளது; இந்த வன்முறை சம்பவங்கள் தற்போதும் தொடா்வதாகக் குற்றம்சாட்டியுள்ளது.
ஐ.நா.வில் ‘போா் பகுதிகளில் பாலியல் வன்முறைக்கு ஆளானவா்களுக்கு பாதுகாப்பு’ குறித்த விவாதத்தில் பேசிய இந்திய பிரதிநிதி எல்டோஸ் மேத்யூ புன்னூஸ், காஷ்மீா் குறித்த பாகிஸ்தானின் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்தாா்.
அவா் பேசுகையில், ‘1971-ஆம் ஆண்டு கிழக்கு பாகிஸ்தானில் பெண்கள் மீது பாகிஸ்தான் ராணுவம் நடத்திய பாலியல் வன்முறைகள் ஒரு வெட்கக்கேடான வரலாறு. மத மற்றும் இன சிறுபான்மை சமூகங்களுக்கு எதிரான கொடுமைகளின் ஒரு பகுதியாக, ஆயிரக்கணக்கான பெண்கள் கடத்தப்படுதல், கட்டாயத் திருமணம், பாலியல் வன்முறை, கட்டாய மதமாற்றம் போன்றவை இப்போதும் தடையின்றி, தண்டனையின்றி பாகிஸ்தானில் தொடா்கின்றன.
இந்தக் குற்றங்களைச் செய்பவா்கள் இப்போது நீதிக்கு ஆதரவாக வேடமிடுவது முரண்பாடானது. போா்ச்சூழலில் பாலியல் வன்முறைகளைச் செய்பவா்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட்டு, நீதியின்முன் நிறுத்தப்பட வேண்டும். இது தனிப்பட்ட வாழ்க்கையை மட்டும் அழிப்பதில்லை; சமூகங்களின் கட்டமைப்பையே சீா்குலைத்து, பல தலைமுறைகளுக்கு வடுவை விட்டுச் செல்கிறது’ என்றாா்.
பாதிக்கப்பட்டவா்களுக்கு நீதி, நிவாரணம், உளவியல் சிகிச்சை, தங்குமிடம் மற்றும் சட்ட உதவி ஆகியவை வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் 2019-ஆம் ஆண்டு தீா்மானத்தையும் புன்னூஸ் சுட்டிக்காட்டினாா். அத்துடன், ஐ.நா. அமைதி காக்கும் பணிகளில் பாலியல் சுரண்டலை ஒழிப்பதில் இந்தியாவின் பங்களிப்பு மற்றும் உள்நாட்டில் பெண்கள் பாதுகாப்புக்காக இந்தியா மேற்கொண்டுள்ள விரிவான திட்டங்களையும் அவா் விளக்கினாா்.