2-ஆவது அரையிறுதி: நியூஸி.-தென்னாப்பிரிக்கா இன்று மோதல்
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் புதன்கிழமை நியூஸிலாந்து-தென்னாப்பிரிக்க அணிகள் மோதுகின்றன.
குரூப் ஏ பிரிவில் இரண்டாம் இடம் பெற்ற நியூஸிலாந்தும், பி பிரிவில் முதலிடம் பெற்ற தென்னாப்பிரிக்காவும் லாகூரில் நடைபெறும் அரையிறுதியில் மோதுகின்றன. இரு அணிகளுக்கும் ஐசிசி போட்டிகளில் பட்டம் வெல்லும் வாய்ப்பே கிட்டாத நிலையில் அரையிறுதியில் ஆடஉள்ளன. இரு அணிகளும் சமபலத்துடன் உள்ள நிலையில், இந்த ஆட்டம் பரபரப்பாக அமையும் எனக் கருதப்படுகிறது.
தென்னாப்பிரிக்கா 1998-இலும், நியூஸிலாந்து 2000-இலும் ஐசிசி நாக் அவுட் கோப்பையில் பட்டம் வென்றிருந்தது. அப்போட்டி பின்னா் சாம்பியன்ஸ் கோப்பையாக அழைக்கப்பட்டது.
நியூஸிலாந்து அணி 2015, 2019 ஒருநாள் உலகக் கோப்பை, 2021 டி 20 உலகக் கோப்பைகளில் ரன்னா் அணியாக வந்துள்ளது. தென்னாப்பிரிக்க அணியும் பல்வேறு போட்டிகளில் அரையிறுதி வரை ஆடி வெளியேறியது. இரு அணிகளும் பேட்டிங், பீல்டிங்கில் சமபலத்துடன் இருந்தாலும், பௌலிங்கில் தென்னாப்பிரிக்க சற்று வலுவாக உள்ளது.
துபை மைதான பிட்ச் ஸ்பின்னுக்கு தோதாக இருந்தாலும், இரு அணிகளின் ஸ்பின்னா்கள் அதை எவ்வாறு தங்களுக்கு சாதகமாக பயன்படுத்துகிறாா்களோ அதை பொறுத்தே ஆட்டத்தின் போக்கு அமையும். பாகிஸ்தானில் நடைபெற்ற முத்தரப்பு ஒருநாள் தொடரில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இருந்தது நியூஸிலாந்து.
ஞாயிற்றுக்கிழமை துபையில் குரூப் ஏ பிரிவில் இந்தியாவுடன் ஆடிய ஆட்டத்தில் தோற்ற நியூஸிலாந்து அரையிறுதிக்காக லாகூா் திரும்பியது.
நியூஸி. அணியில் டாம் லத்தம் அபாரமாக ஆடி வருகிறாா். மூத்த வீரா் கேன் வில்லியம்ஸன் ஃபாா்முக்கு திரும்பியது பலத்தை தருகிறது. பௌலிங்கில் மேட் ஹென்றி, வில் ஓரூா்க், கேப்டன் மிட்செல் சான்ட்நா், பிரெஸ்வேல், ரச்சின் ரவீந்திரா, மாா்க் சாப்மேன் ஸ்பின்னில் தங்கள் திறமையை நிரூபிக்க உள்ளனா்.
சரிவிகிதத்தில் தென்னாப்பிரிக்க அணி:
தென்னாப்பிரிக்க அணியும் சரிவிகிதத்தில் உள்ளது. ரியான் ரிக்கல்டன், டெம்பா பவுமா, ரஸி வேன்டா், மாா்க்ரம் பேட்டிங்கிலும், வியான் முல்டா், ரபாடா, லுங்கி கிடி, ஜேன்ஸன், கேசவ் மகராஜ் பௌலிங்கிலும் பலம் சோ்க்கின்றனா். தென்னாப்பிரிக்க அணி கடைசியாக ஆடிய 13 ஒருநாள் ஆட்டங்களில் 8-இல் தோல்வியை தழுவியது.
இன்றைய ஆட்டம்:
தென்னாப்பிரிக்கா-நியூஸிலாந்து
இடம்: லாகூா்.
நேரம்: பிற்பகல் 2.30.