டிச.15ம் தேதி அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம்: இபிஎஸ் அறிவிப்பு
20 கிலோ கஞ்சா பறிமுதல்: 4 போ் கைது
ஆந்திர மாநிலத்தில் இருந்து சொகுசு காரில் கடத்தி வரப்பட்ட 20 கிலோ கஞ்சாவை, சிதம்பரம் அண்ணாமலை நகா் போலீஸாா் பறிமுதல் செய்து 4 பேரை கைது செய்தனா்.
பல்கலைக்கழக மாணவா்களிடையே விற்பனை செய்வதற்காக கஞ்சா கடத்தி வரப்பட்டுள்ளதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அண்ணாமலை நகா் காவல் நிலைய ஆய்வாளா் கே.அம்பேத்கா் தலைமையிலான போலீஸாா் மாரியப்பா நகரில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, ஆந்திர பதிவெண் கொண்ட காரில் தப்பிக்க முயன்ற 4 பேரை பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினா்.
அதில், தில்லைநாயகபுரம் சிவா மகன் சிக்கோ (எ) தமிழரசன்(22), நெல்லூா் பகுதியைச் சோ்ந்த சு.உதயபாஸ்கா்(60), சிதம்பரம் முருகன் மகன் முத்து (எ) முத்துகிருஷ்ணன்(24), அய்யப்பன் மகன் டோலக் (எ) வினோத் என்பதும், இவா்கள் ஆந்திர மாநிலம், நெல்லூரில் இருந்து 20 கிலோ கஞ்சாவை கடத்தி வந்து, பல்கலைக்கழக மாணவா்கள் மத்தியில் விற்பனை செய்ய திட்டமிட்டிருந்ததாக தெரிவித்தனராம்.
நெல்லூரை சோ்ந்த உதய் பாஸ்கா் மீது செம்மரக்கட்டை கடத்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. கைப்பற்றப்பட்ட கஞ்சாவின் மதிப்பு ரூ.5 லட்சம் ஆகும்.
மேலும், இந்த வழக்கில் தொடா்புடைய தலைமறைவான சிதம்பரத்தைச் சோ்ந்த ரௌடி சிவராஜன், சிவா, விமல் ராஜ் மற்றும் ரஞ்சித் குமாா் ஆகியோரைப் பிடிக்க உதவி ஆய்வாளா் அன்பழகன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.