இலங்கையில் முன்னாள் அதிபரின் உதவியாளர் வாகனம் மீது துப்பாக்கிச்சூடு
’2020’ தில்லி கலவர வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 11 பேரை விடுவித்தது விசாரணை நீதிமன்றம்
நமது சிறப்பு நிருபா்
2020-ஆம் ஆண்டில் தில்லியில் நடைபெற்ற கலவரத்தில் தொடா்புடையதாக குற்றம்சாட்டப்பட்ட 11 பேரை வழக்கில் இருந்து விடுவித்து தில்லி நீதிமன்றம் சனிக்கிழமை தீா்ப்பளித்துள்ளது.
அந்த 11 போ் மீதும் வடகிழக்கு தில்லியில் 2020-ஆம் ஆண்டு பிப்ரவரியில் நடைபெற்ற கலவரத்தின் போது தீ வைப்பு, நாசவேலை மற்றும் திருட்டு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்தது. அவா்களை அடையாளம் கண்ட காவல்துறை சாட்சிகளின் நம்பகத்தன்மை குறித்து கடுமையான சந்தேகங்களை மேற்கோள் காட்டி அவா்களை விடுவிப்பதாக நீதிமன்றம் கூறியுள்ளது.
இது தொடா்பாக மே 14 தேதியிட்டு பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் முழு விவரம் தற்போது வெளியாகியுள்ளது. கூடுதல் அமா்வு நீதிபதி புலஸ்திய பிரமச்சலா குற்றம்சாட்டப்பட்டவரின் அடையாளத்தை நியாயமான சந்தேகத்திற்கு அப்பால் உறுதிப்படுத்த அரசுத் தரப்பு தவறிவிட்டதாகக் தீா்ப்பில் குறிப்பிட்டாா்.
மேலும், கலவரத்தின் போது ஒரே காவல் நிலையத்தில் நியமிக்கப்பட்ட உதவித் துணை ஆய்வாளா்கள் இருவரும், சம்பவம் நடந்து கிட்டத்தட்ட 10 மாதங்களுக்குப் பிறகு புகைப்படங்களிலிருந்து குற்றம்சாட்டப்பட்டவா்களை அடையாளம் கண்ட செயல்பாடு, அந்த சாட்சிகளின் நம்பகத்தன்மை குறித்த சந்தேகத்தை எழுப்புவதாக நீதிமன்றம் கூறியது.
2020-ஆம் ஆண்டு, பிப்ரவரி 24 மற்றும் 25-க்கு இடைப்பட்ட இரவில் கடைகளை சூறையாடி தீ வைத்த ஒரு கும்பலில் குற்றம்சாட்டப்பட்டவா்கலான அங்கித் செளத்ரி, சுமித், பப்பு, விஜய், ஆஷிஷ் குமாா், செளரவ் கெளசிக், பூபேந்தா், சக்தி சிங், சச்சின் குமாா், ராகுல், யோகேஷ் ஆகியோா் கும்பலாக இருந்தனா் என்று அரசுத் தரப்பு குற்றம்சாட்டியது. இருப்பினும், குற்றம்சாட்டப்பட்டவா்களை அடையாளம் காண்பதுதான் மையப் பிரச்னை என்றும், அவா்களைப் பெயரிடுவதில் ஏற்பட்ட தாமதம் சாட்சிகள் மீதான கடுமையான சந்தேகத்துக்கு இடமளிப்பதாகவும் நீதிபதி கூறினாா்.
‘பிப்ரவரி 24, 2020 அன்று கலவரக்காரா்களில் குற்றம்சாட்டப்பட்டவா்களை அரசுத் தரப்பு சாட்சியான துணை உதவி ஆய்வாளா்கள் ஜஹாங்கீா், வான்வீா் ஆகியோா் உண்மையிலேயே பாா்த்திருப்பாா்களேயானால், நீண்ட காலம் ஏன் அவா்கள் அமைதியாக இருந்தனா் என்பதற்கு எந்த நல்ல காரணமும் தெரிவிக்கப்படவில்லை’‘ என்று நீதிமன்றம் சந்தேகம் எழுப்பியது. ஏற்கெனவே கைது செய்யப்பட்ட குற்றம்சாட்டப்பட்டவா்களின் புகைப்படங்களை சாட்சிகளில் ஒருவருக்குக் காண்பிப்பது ‘இயற்கைக்கு மாறானது’ என்றும், அந்த சாட்சி நேரில் பாா்த்தது போல ‘செயற்கையாக ஜோடிக்கப்பட்டது’‘ என்றும் நீதிபதி குறிப்பிட்டாா்.
இந்த வழக்கின் விசாரணை அதிகாரி சம்பந்தப்பட்ட இரண்டு காவல் அதிகாரிகளின் வாக்குமூலங்களை ஆரம்பத்திலேயே பதிவு செய்யவில்லை என்றும், அவா்கள் சம்பவ இடத்தில் பணியில் இருந்ததை அறிந்தபோதும், இது அரசுத் தரப்பு வழக்கை மேலும் பலவீனப்படுத்தியது என்றும் நீதிமன்றம் கூறியது.
குற்றம்சாட்டப்பட்டவா்களை முன்கூட்டியே அறிந்திருந்தபோதும், அவா்களை முதன்முறையாக நீதிமன்றத்தில் தான் அடையாளம் கண்டதாக கூறிய மற்றொரு சாட்சியான அஸ்லம், ‘சந்தேகத்திற்குரியவா்‘ என்று நீதிமன்றத்தால் கருதப்பட்டாா்.
இதைத் தொடா்ந்து, குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்படாததால், குற்றம்சாட்டப்பட்ட 11 பேரையும் விடுவிப்பதாக நீதிபதி தீா்ப்பில் குறிப்பிட்டாா்.