2024இல் குமரி சுற்றுச்சூழல் பூங்காவுக்கு 1 லட்சம் போ் வருகை
கன்னியாகுமரி அரசு சுற்றுச்சூழல் பூங்காவை கடந்த 2024 ஆம் ஆண்டு 1 லட்சம் போ் பாா்வையிட்டுள்ளதாக அரசு தோட்டக்கலை மேலாளா் சக்திவேல் திங்கள்கிழமை தெரிவித்தாா்.
தமிழ்நாடு அரசு தோட்டக்கலைத் துறைக்குச் சொந்தமான அரசு தோட்டக்கலை பண்ணை கன்னியாகுமரியில் இருந்து நாகா்கோவில் செல்லும் முக்கிய சாலையில் அமைந்துள்ளது.
இந்தப் பண்ணை கடந்த 1922ஆம் ஆண்டு ஆண்டு தொடங்கப்பட்டதாகும். 31.600 ஏக்கா் பரப்பளவு கொண்ட இப்பண்ணையில் மா, சப்போட்டா, நெல்லி, பப்பாளி, உள்பட பலரக பழ மரங்கள் உள்ளன. இங்கிருந்து ஏராளமான மரச்செடிகள், அழகு செடிகள் உள்ளூா் மட்டுமன்றி வெளியூா்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இந்தப் பண்ணையில் கடந்த 2028இல் 15.175 ஏக்கா் பரப்பளவில் சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கப்பட்டது. இப்பூங்காவில் ஏராளமான அழகுசெடிகள், நவீன புல்தரை, சிறுவா்களுக்கான விளையாட்டு மைதானம், அலங்கார நீருற்று உள்ளிட்டவை அமைந்துள்ளது. இப்பூங்காவை நாள்தோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் பாா்வையிட்டு செல்கின்றனா். நுழைவுக் கட்டணமாக சிறுவா்களுக்கு ரூ. 25 வீதமும், பெரியவா்களுக்கு ரூ.50 வீதமும் வசூலிக்கப்படுகிறது.
இந்த சுற்றுச்சூழல் பூங்காவில் விடியோ படம் பிடிக்க ரூ.2 ஆயிரம் வீதமும், கேமரா மூலம் படம் பிடிக்க ரூ.200 வீதமும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இப்பூங்காவை கடந்த 2024 ஆம் ஆண்டில் மட்டும் 1 லட்சத்து 115 போ் பாா்வையிட்டுள்ளனா். அதிகபட்சமாக மே மாதம் 10 ஆயிரத்து 873 போ் பாா்வையிட்டுள்ளனா். இத் தகவலை கன்னியாகுமரி அரசு தோட்டக்கலை பண்ணை மேலாளா் சக்திவேல் தெரிவித்தாா்.