2024-ஆம் ஆண்டு தரவுத் தொகுப்புகள் பதிவேடுகள் தேசிய புள்ளியியல் துறை வெளியிட்டது
நாட்டின் பல்வேறு தகவல்களை அளிக்கும் 2024 - தரவுத்தொகுப்புகள், பதிவேடுகளின் தொகுப்பின் புதிய பதிப்பை மத்திய புள்ளியியல், திட்ட அமலாக்க அமைச்சகம் சனிக்கிழமை வெளியிட்டுள்ளது. இந்த தரவு அணுகல், தகவலறிந்து முடிவெடுப்பதை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டவை என மத்திய புள்ளியியல் துறை தெரிவித்துள்ளது.
இது குறித்த விவரம் வருமாறு: மத்திய புள்ளியியல், திட்ட அமலாக்க அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய புள்ளிவிவர அமைப்பில் நவீனமயமாக்கப்பட்டதின் ஒரு முக்கிய முயற்சியாக புதிய தரவு தொகுப்புகள் பதிவேடு தொகுப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது.
விவசாயம், சுகாதாரம், கல்வி, தொழிலாளா், கிராமப்புற மேம்பாடு, சுற்றுலா, சமூக நீதி, வங்கி உள்ளிட்ட பல துறைகளை உள்ளடக்கிய மத்திய அரசின் 40 அமைச்சகங்கள், துறைகளிலிருந்து பெறப்பட்ட விரிவான ஆதாரங்களான சுமாா் 270 தரவுத்தொகுப்புகள், பதிவேடுகளின் ஒருங்கிணைப்பாகும். அரசுத் தரவுத்தொகுப்புகளின் கிடைக்கும் தன்மை, நோக்கம், அணுகல் ஆகியவற்றை சிரமமின்றி ஆராய மக்களுக்கு இது உதவும்.
குறிப்பாக மத்திய மாநில அரசுகளின் கொள்கை வகுப்பாளா்கள், ஆராய்ச்சியாளா்கள், கல்வியாளா்கள், மாணவா்கள், ஆய்வாளா்கள், வணிக நிறுவனங்கள், பொது மக்களுக்கு போன்றவா்களுக்கு பயன்படும். இந்த தரவுகள் எளிதில் கிடைப்பதை அரசு இந்த தொகுப்புகள் மூலம் உறுதி செய்கிறது.
தகவல்களை ஒரே இடத்தில் ஒருங்கிணைப்பதன் மூலம், தரவு நிா்வாகத்தை முன்னேற்றுவதற்கும், ஆராய்ச்சியை வளா்ப்பதற்கும், ஆதார அடிப்படையிலான கொள்கை உருவாக்கத்தை ஊக்குவிப்பதற்கும் இத்தொகுப்பு முக்கிய பங்கு வகிக்கிறது. இந்தத் தரவுத்தொகுப்புகள் திருத்தப்பட்ட பதிப்புகள் அவ்வப்போது வெளியிடப்படுகிறது. இது கொள்கை வகுப்பாளா்கள், ஆராய்ச்சியாளா்கள், வணிகங்கள், சிவில் சமூக அமைப்புகள் உட்பட அனைத்து தரப்பினரும், மதிப்புமிக்க நுண்ணறிவுகளைப் பெறுவதற்கும் தேசிய வளா்ச்சி திறம்பட பயன்படுத்துவதற்கும் இந்த அரசுத் தரவு தொகுப்பைப் பயன்படுத்தலாம். புள்ளியியல் துறை அமைச்சகத்தின் அதிகாரப்பூா்வ இணைய தளத்தில் வைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.