2024 - இந்தியத் தேர்தல் களத்தில் வென்றதும் வீழ்ந்ததும்!
2024! யாருக்கு சிறப்பான ஆண்டாக அமைந்ததோ, இல்லையோ? இந்தியத் தேர்தல் ஆணையத்துக்கு மிக முக்கியமான ஆண்டாகவே அமைந்தது என்றுதான் சொல்ல வேண்டும்.
ஆம்.. அனைவரும் எதிர்பார்த்திருந்த மக்களவைத் தேர்தல் ஒருபுறம், அதுமட்டுமல்லாமல், கணிசமான மாநிலங்களில் பேரவைத் தேர்தல்களும் நடைபெற்று முடிந்தன.
முடிவுகளோ திகில் திரைப்படம் போல திடீர் திருப்பங்களும் அதிர்ச்சிகளும் யாரும் யூகிக்க முடியாததாக அமைந்தன.
பிரசாரங்கள், பேரணிகள், வாக்குறுதிகள், வன்முறைகள் எனப் பரபரப்புக்கு பஞ்சமே இல்லை. மொத்தமாக 97 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர்.
அருணாசலப் பிரதேசம், சிக்கிம், ஒடிசா, ஆந்திரம், ஜம்மு - காஷ்மீர், ஹரியாணா, ஜார்க்கண்ட், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களிலும் தேர்தல்கள் நடைபெற்றன. சில மாநிலங்களில் ஆட்சி தக்கவைக்கப்பட்டாலும் சில மாநிலங்களில் யாரும் எதிர்பார்க்காத முடிவுகளும் அனைவருக்கும் ஆச்சரியம் அளிக்கும் வகையில் அமைந்தன.
இதனிடையேதான் 7 கட்டங்களாக மக்களவைக்கும் தேர்தல் நடைபெற்றது.
நாட்டில் எந்த மூலையில் எந்த மாநிலமாக இருந்தால் என்ன? யார் ஆட்சியில் இருந்தால் என்ன? நாங்கள் எங்களது வலிமையைக் காட்டுவோம் என்று பாரதிய ஜனதாவின் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஒருபுறம் வரிந்து கட்டி நிற்க, பாஜகவுக்கு எதிராகத் திரண்டிருந்த கட்சிகள் அனைத்தும் காங்கிரஸ் தலைமையில் இந்தியா கூட்டணியில் காங்கிரஸ், சமாஜவாதி கட்சி, திரிணமூல் காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சி உள்ளிட்ட தேசிய கட்சிகள் மக்களவைத் தேர்தலிலும் களமிறங்கின. தமிழகத்தில் திமுக, விசிக, இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளும் இந்தியா கூட்டணிக்கு ஆதரவளித்தன.
இதையும் படிக்க | 2024 - டி20 சாம்பியன் முதல் உலக செஸ் சாம்பியன் வரை... முக்கிய நிகழ்வுகள் ஒரு பார்வை!
தொடக்கத்தில் இந்தியா கூட்டணியில் இருந்தவரான பிகார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தள தலைவருமான நிதிஷ் குமார் தனது பாணியில் கடைசி நேரத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு தாவினார். அவருக்கு கூட்டணி தாவல்கள் ஒன்றும் புதிதல்லவே..!
அதேபோல, இந்தியா கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்திருத்து, ‘இந்தியா கூட்டணி’ பெயர் சூட்டிய திரிணமூல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மமதா பானர்ஜி கடைசி நேரத்தில் தாமாகவே தங்கள் கட்சி வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு பாஜகவினருக்கு மட்டுமின்றி, இந்தியா கூட்டணியினருக்கும் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார். இதனால், மேற்கு வங்கத்தில் காங்கிரஸும், திரிணமூல் காங்கிரஸும் தனித்துப் போட்டியிட்டன.
மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. ஏப்.19ஆம் தேதி 102 தொகுதிகளுக்கும், ஏப். 26ஆம் தேதி 89 தொகுதிகளுக்கும், மே 7ஆம் தேதி 94 தொகுதிகளுக்கும், மே 13ஆம் தேதி 96 தொகுதிகளுக்கும், மே 20ஆம் தேதி 49 தொகுதிகளுக்கும், மே 25ஆம் தேதி 57 தொகுதிகளுக்கும், ஜூன் 1ஆம் தேதி 57 தொகுதிகளுக்கும் தேர்தல்கள் நடத்தப்பட்டன. ஜூன் 3 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டன.
‘மோடியின் உத்தரவாதம்’
பாஜகவின் முக்கிய வாக்குறுதியாக ‘மோடியின் உத்தரவாதம்’ (modi ki guarantee) மட்டுமே அவர்களின் பிரதானமாகப் பார்க்கப்பட்டது.
நாடு முழுவதும் ஒரே ஒரு குரல்தான் மீண்டும் ஒலிக்கப் போகிறது. மோடி அரசு 400 இடங்களைத் தாண்டப் போகிறது என்றும் பாஜகவினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
இந்தாண்டு தொடக்கத்தில் அயோத்தியில் ராமர் கோயில் திறக்கப்பட்டதிலிருந்தே மீண்டும் பாஜகதான் ஆட்சிக்கு வரும் என்று கட்சிக்காரர்கள் மிகவும் உற்சாகத்தில் இருந்தனர். அயோத்தியில் ராமர் கோயில் திறக்கப்பட்டதற்கு காங்கிரஸ் எதிர்ப்புத் தெரிவிக்க அதனையும் ஒரு திறவுகோலாகக் கையில் எடுத்த பாஜக, “இது ராமர் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான தேர்தல்” என வித்தியாசமான பிரசாரத்தில் ஈடுபட்டது.
எவ்வாறாயினும், அதிக வாக்கு எண்ணிக்கையுடைய இந்து மக்களின் வாக்குகளைக் கைப்பற்றிவிட்டால் போதும், சிறுபான்மையினரின் வாக்குகள் பற்றி கவலையில்லை என்று பாஜக தலைமை ஒரு கணிப்பு வைத்திருந்தது.
[ஹைதராபாத்தில் நடந்த பிரசாரம் ஒன்றில் பாஜக வேட்பாளர் மாதவி லதா, அங்கிருந்த மசூதியை நோக்கி வில்லில் இருந்து அம்பு எய்துவது போல சைகை காட்டியதும் ஒரு சமிக்ஞை!]
ஆனால், காங்கிரஸ் கட்சியோ.. நாடு முழுவதுமான ஜாதிவாரி கணக்கெடுப்பு, எஸ்சி, எஸ்டி, ஓபிசிக்கான இடஒதுக்கீட்டில் 50% வரம்பை உயர்த்துவதற்கான அரசியலமைப்பு திருத்தம், காலியாக உள்ள 30 லட்சம் காலிப் பணியிடங்கள் நிரப்புதல், அக்னிபத் திட்டம் ரத்து, ஜம்மு - காஷ்மீருக்கு முழு மாநில அந்தஸ்தை உடனடியாக மீட்டெடுப்பது, ஜிஎஸ்டியில் புதிய மாற்றங்கள் கொண்டுவருதல் என வாக்குறுதிகளை அள்ளிவீசியது.
இதையும் படிக்க | 2024: உலகின் தேர்தல் களங்களும் பதற்றங்களும்!
2019 ஆம் ஆண்டு தேர்தலில் 303 இடங்களில் வென்று தனிப் பெரும்பான்மையுடன் வென்றிருந்த பாஜகவால் இந்த முறை ஆட்சியைப் பிடிக்க முடியாமல் போனது. 240 இடங்களில் வெற்றிபெற்ற பாரதிய ஜனதா கட்சி மக்களவையில் பெரிய கட்சியாகவும், காங்கிரஸ் 99 இடங்களில் வெற்றிபெற்று 2 ஆவது இடத்தையும், சமாஜ்வாதி கட்சி 37 தொகுதியில் வெற்றி பெற்று மூன்றாவது இடத்தையும் பிடித்தது.
உத்தரப் பிரதேசத்தில்!
நாட்டிலேயே அதிக மக்களவைத் தொகுதிகளைக் கொண்ட மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் பாதி தொகுதிகளை வென்றால் போதும், இந்தியாவையே வென்றது போல என்று கூறுவதுண்டு!
அதேபோல, கடந்த முறை மக்களவைத் தேர்தலில் வெறும் 5 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்ற அகிலேஷ் யாதவின் சமாஜவாதி கட்சி, இந்த முறை 37 தொகுதிகளில் வெற்றிபெற்று அசத்தியது. மாநிலத்தில் ஆளுங்கட்சியாக இருந்த பாஜகவால் இந்தியா கூட்டணிக்கு ஈடுகொடுக்க முடியாமல் 29 இடங்களை இழக்க நேரிட்டது. கடந்த முறை 62 இடங்களில் வெற்றிபெற்ற பாஜக, இந்த முறை 33 இடங்களில் மட்டுமே வென்றது.
அதிர்ச்சி கொடுத்த அயோத்தி
ஹிந்துத்துவத்தின் முக்கிய இடமாகவும், ராமர் பிறந்த இடமாகவும், மக்களவைத் தேர்தலில் ஹிந்துக்களின் வாக்குகளை கணிசமாக அதிகளவில் பெற்றுத் தரக்கூடிய ‘பிரம்மாஸ்திரமாகவும்’ கருதப்பட்ட அயோத்தியில் பாஜக வரலாற்று வெற்றி பெறும் என்றே அனைவரும் கருதினர். இதனாலேயே, கோயில் கட்டுமானப் பணிகள் அவசர, அவசரமாக முடிக்கப்பட்டு ஜனவரி 22 ஆம் தேதி ‘பிராண பிரதிஷ்டை’ விழா நடத்தப்பட்டது.
ஆனால், யாரும் எதிர்பார்த்திடாத வகையில் அயோத்தி இருக்கும் ஃபைசாபாத் மக்களவைத் தொகுதியில் பெரும் தோல்வியைத் தழுவிய பாஜக, தொகுதியிலுள்ள 5 பேரவைத் தொகுதிகளிலும் குறைந்த வாக்குகளையே பெற்றது.
இது பாஜக தலைமையையே ஆட்டிப் பார்த்தாலும் அதன் பின்னர் சில முக்கிய காரணங்களும் இருப்பதாக பார்க்கப்படுகிறது. ராமர் கோயில் கட்டப்படுவதற்கு அருகில் உள்ள இடங்களும், மக்கள் குடியிருந்த வீடுகளின் இடங்களும் தேவைப்பட்டன. இதனால், அங்கு வசித்துவந்த மக்களின் வீடுகள் இடிக்கப்பட்டது.
தங்களால் எதையும் செய்ய முடியும், மக்கள் அமைதியாக இருப்பார்கள் என்ற கர்வத்தில் பாஜகவின் ஃபைசாபாத் (அயோத்தி) வேட்பாளர் லாலு சிங் நடவடிக்கைகளும் தோல்விக்கு முக்கிய காரணமாக பார்க்கப்பட்டது.
பொது தொகுதியான அயோத்தியில் தலித் சமூகத்தைச் சேர்ந்த 79 வயதான அவதேஷ் பிரசாத்தை களமிறக்கிய சமாஜவாதி, 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று மத்தியில் ஆளும் பாஜகவை மட்டுமின்றி அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.
பின்னடைவைச் சந்தித்த பிரதமர்
75 நாள்கள் பம்பரமாக சுழன்று தேர்தல் பிரசாரம், வாகனப் பேரணிகள் என சுற்றிக்கொண்டிந்த பிரதமர் மோடி, வடக்கில் வாரணாசியிலோ அல்லது தெற்கில் ராமேசுவரத்திலோகூட போட்டியிடுவார் என முதலில் வதந்திகள் பரவின.
இருந்தாலும் பிரதமர் மோடி, வாரணாசியிலேயே மூன்றாவது முறையாக களமிறங்கினார். மக்களவைத் தேர்தலுக்காக மட்டும் 206 பேரணிகள், 80 ஊடக நேர்காணல்களிலும் கலந்துகொண்டார். மேலும் 7 முறைக்கு மேல் தமிழகத்தில் பிரசாரங்களில் பங்கேற்றார்.
வாரணாசி தொகுதியில் போட்டியிட்ட பிரதமா் நரேந்திர மோடிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. முதல் 3 சுற்று வாக்கு எண்ணிக்கையில் பின்னடைவைச் சந்தித்த நிலையில், பின்னா் அடுத்தடுத்த சுற்றுகளில்தான் முன்னிலை பெற்றார். தன்னை எதிா்த்துப் போட்டியிட்ட அஜய் ராய்யைக் காட்டிலும் 1.52 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்று தனது தொகுதியைத் தக்கவைத்துக்கொண்டார்.
ராகுல் காந்திக்கு இரட்டை வெற்றி
‘ஒற்றுமை யாத்திரை’ மூலம் இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் சுழன்று கொண்டிருந்த ராகுல் காந்தி ரேபரேலி மற்றும் கேரளத்தின் வயநாடு தொகுதியில் 3 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளுடன் அபார வெற்றிபெற்று அசத்தினார். இரு தொகுதிகளில் ஒன்றில் மட்டுமே எம்பியாக இருக்க முடியும் என்பதால் வயநாடு தொகுதியில் ராஜிநாமா செய்தார் ராகுல்.
காங்கிரஸுக்கு ‘கை’ கொடுக்காத மாநிலங்கள்!
நல்ல கூட்டணியில்லாமல் காங்கிரஸ் போட்டியிட்ட 8 மாநிலங்களிலுள்ள 67 மக்களவைத் தொகுதிகளில் ஒரு தொகுதியில்கூட காங்கிரஸின் ‘கைகள்’ ஓங்கவில்லை.
ஆந்திரம் (23), அருணாச்சல் (2), ஹிமாசல் (4), ம.பி (29), உத்தரகண்ட் (5) , திரிபுரா (2), சிக்கிம் (1), மிசோரம் (1) ஆகிய 8 மாநிலங்களும் முழுவதுமாக காங்கிரஸைக் கைவிட்டுவிட்டன. இதுவும் காங்கிரஸ் ஆட்சியைப் பெற முடியாததற்கு ஒரு முக்கிய காரணம் எனலாம்.
பொய்த்துப்போன கணிப்புகள்
பாஜக ஒருபுறம் 400 இடங்களுக்குமேல் வெல்லும் என்று மார்தட்டி கொண்டிருந்த வேளையில், தேசிய ஜனநாயகக் கூட்டணி 361 - 401 இடங்களையும் இந்தியா கூட்டணி 133 - 166 இடங்களையும் பெறும் என தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகின.
ஆனால், நடந்ததே வேறு..! பாஜகவின் பின்னடைவு, இந்தியா கூட்டணியின் முன்னிலை ஆகியவை காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி அமைய போகிறது என்று நினைத்தவர்களுக்கும், அதனை நம்பி பங்குச்சந்தை வர்த்தகத்தில் ஆரம்பம் முதலே வங்கிகள், பொதுத்துறை, ஐடி நிறுவனங்கள் மீது முதலீடு செய்ய, முதலீட்டாளர்கள் ரூ. 31 லட்சம் கோடியை இழந்தனர்.
காங்கிரஸ் பின்னடைவுக்கான காரணங்கள்!
2023 ஆம் ஆண்டு மே மாதத்தில் தொடங்கிய மணிப்பூர் வன்முறையின் தீவிரம் 2024 ஆம் ஆண்டிலும் தொடர்ந்தது. ராகுல் காந்தி அதை மனதில் வைத்து ஒற்றுமை யாத்திரையை 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் மணிப்பூரின் தலைநகரான இம்பாலில் தொடங்கினார்.
மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு நெருக்கடி கொடுக்கவும் இந்தியா கூட்டணியில் காங்கிரஸின் வலிமையை அதிகரிக்கவும் இந்தப் பயணத்தை அவர் பயன்படுத்திக்கொண்டார்.
காங்கிரஸ் கட்சி கூட்டணியில் ஏற்பட்ட அதிருப்திகள், முக்கியமான விவகாரங்களை மேலும் அழுத்தமாக முன்வைக்காமல் போனது எல்லாம் காரணங்களாக இருக்கலாம்.
இதையும் படிக்க | 2024 - 'தயாரிப்பாளர்' உதயநிதி Vs 'ஹீரோ' விஜய் என்ட்ரி! - தயாராகும் தமிழக அரசியல்
அமலாக்கத் துறை, வருமான வரித் துறை, மத்தியப் புலனாய்வுத் துறை உள்ளிட்ட விசாரணை அமைப்புகள் எதிர்க்கட்சிகள் மீது கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டன. இதுவும் பாஜக அரசின் வேலையாக இருக்கும் என்று கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.
அனைவரும் ஒன்றாக இருப்பதைக்கண்ட பாஜக அரசு, “இருங்க பாய்.. கம்பி எண்ணுவீங்க பாருங்க பாய்..!” என ஜார்க்கண்ட் முதல்வராக இருந்த ஹேமந்த் சோரன் நில மோசடி தொடர்பான சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனை வழக்கிலும், ஆம் ஆத்மி கட்சியினருடன் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கிலும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
பாஜகவின் பின்னடைவு!
இந்த முறை 400 இடங்களில் வெல்வோம் (ஆப்கி பார் 400 பார்) என்ற முழக்கத்துடன் களமிறங்கிய பாஜக, போதுமான இடங்களில் வெல்லாததால் கூட்டணிக் கட்சிகளின் துணையுடன் ஆட்சி அமைக்கும் நிலை உருவானது. பாஜக முன்புபோல அசுர பலத்துடன் நாடாளுமன்றத்தில் இயங்க முடியாது என்றும், நிதிஷ்குமார் கடைசி நேரத்தில் கைவிட்டுவிட்டால் பாஜக அரசு ஒரு மாதம்கூட தாண்டாது என்றும் அனைவரும் நினைத்தனர்.
நாட்டிலேயே அதிகமாக 80 மக்களவைத் தொகுதிகளைக் கொண்ட உத்தரப் பிரதேசத்தில் இந்த முறை அதிகம் இழந்ததும், மகாராஷ்டிரத்தில் ஏற்பட்ட பின்னடைவுமே பாஜக கூட்டணியின் வெற்றி எண்ணிக்கை குறைந்ததற்கான காரணமாகப் பார்க்கப்பட்டது.
இந்தியா கூட்டணியின் ஆதிக்கத்தில் தமிழகம்
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஒருமுறை மக்களவையில் பேசுகையில், “நீங்கள் ஒருபோதும் தமிழக மக்களை ஆள மாட்டீர்கள்” (You will never rule over the people of Tamil Nadu) என்று கூறியிருந்தார்.
அதை உண்மையாக்கும் விதத்தில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி தமிழகம் - புதுவையில் 40 தொகுதிகளிலும் வென்று வரலாற்றுச் சாதனை படைத்தது.
பல வியூகங்கள், திட்டங்கள் என அனைத்தையும் அடித்து நொறுக்கிய இந்தியா கூட்டணியை எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக மற்றும் பாஜகவின் அண்ணாமலையால் எதுவும் செய்ய முடியவில்லை.
அதிமுகவின் வாக்குச் சதவிகிதம் கணிசமாக குறைந்த நிலையில் அதிக இடங்களில் 3-வது இடம் பிடித்ததுடன், வைப்புத் தொகையையும் இழந்தது. பாஜக மூன்றாவது இடம் பிடித்தது. அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் சீமானின் நாம் தமிழர் கட்சி 4-வது இடத்தைப் பிடித்தது.
புதியவர்கள்
18 ஆவது மக்களவைக்கு 280 எம்பிக்கள் முதல்முறையாக தேர்வாகினர். அவர்களில் ஏற்கெனவே எம்பிக்களாக பதவியில் உள்ள 263 பேர் மீண்டும் தேர்வாகினர். 16 பேர் மாநிலங்களவையில் எம்பிக்களாக இருந்து மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
மக்களவைத் தேர்தல் சுவாரசியங்கள்!
அலாகாபாத் தொகுதியில் 20 ஆண்டுகளுக்குப் பின் பாஜக தோல்வியைத் தழுவியது. ஆனால், அதற்கு மாற்றாக தலைநகரான தில்லியில், மொத்தமுள்ள 7 தொகுதிகளிலும் வென்றது.
பாஜகவின் கோட்டையாகக் கருதப்படும் குஜராத்தில் ஒரு இடத்தில் தோல்வியைத் தழுவிய பாஜக, ம.பி.யில் மொத்தமுள்ள 29 தொகுதிகளிலும் வெற்றியைப் பெற்றது.
பாஜகவின் 13 மத்திய அமைச்சர்கள் தங்கள் தொகுதிகளுடன் பதவியையும் பறிகொடுத்தனர்.
இந்தூர் எம்பி சங்கர் லக்வானி 11.72 லட்சம் வாக்குகள் வித்தியாசத்திலும், சிவசேனையின் ரவீந்திர தத்தாராம் வைகர் 48 வாக்குகள் வித்தியாசத்திலும் வென்றனர்.
“பாஜக இல்லாத தென்னிந்தியா” என்ற வரலாற்றை உடைத்து கேரளத்தின் திருச்சூரில் சுரேஷ் கோபி வெற்றி கண்டார்.
பகுஜன் சமாஜ் கட்சி 424 இடங்களில் போட்டியிட்டு தேசிய அளவில் 2.04% வாக்குகளையும், உத்தரப் பிரதேசத்தில் 9.39% வாக்குகளையும் பெற்றபோதிலும் ஒரு இடத்தில்கூட வெற்றி பெற முடியாமல் போனது.
2024 மக்களவைத் தேர்தலில் 18 லட்சம் விவிபேட் கருவிகள் மற்றும் 17 லட்சம் வாக்குப்பதிவு எந்திரங்கள் 10.5 லட்சம் வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்பட்டன.
பாஜக மற்றும் காங்கிரஸ் முறையே 23 கோடி(23,59,73,935), மற்றும் 13 கோடி(13,67,59,064) வாக்குகள் பெற்றன.
சிக்கல்களும் வன்முறைகளும்!
ஆந்திரத்தில் பல இடங்களில் அப்போதைய ஆளுங்கட்சியான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சியான தெலுங்கு தேசம் தொண்டர்கள் இடையே நடந்த மோதலில் கல்வீச்சு, வாகனங்களுக்கு தீவைப்பு சம்பவங்களால் பதற்றம் நிலவியது.
மேற்கு வங்கத்தில் தேர்தலின் கூச் பிகார், சந்தமாரி பகுதியில், தங்கள் வாக்குச்சாவடி அருகே திரிணமூல் காங்கிரஸ் - பாஜக தொண்டர்கள் மாறி, மாறி கல்வீசித் தாக்கி கொண்டதில் வன்முறை வெடித்தது. தெற்கு பர்கானஸ் பகுதியில் வாக்குச்சாவடிக்குள் புகுந்து வாக்கு எந்திரங்களை உடைத்து கால்வாய்களில் வீசினர். இதனால், அங்கு பரபரப்பான சூழல் உருவானது.
மத்தியப் பிரதேசத்தில் 36 வாக்குச் சாவடி ஊழியர்கள் மற்றும் வாக்குப் பெட்டிகளுடன் சென்று கொண்டிருந்த பேருந்து தீப்பிடித்து விபத்தில் சிக்கியது. அந்தப் பேருந்தில் இருந்த ஊழியர்கள் தப்பித்த நிலையில் வாக்குப் பெட்டிகள் அனைத்து தீக்கிரையாகின. அந்த வாக்குப் பெட்டிகள் அனைத்தும் அதிகளவிலான முஸ்லிம் மக்கள் வாழும் பகுதியில் இருந்து கொண்டுவரப்பட்டதாக பின்னர் தெரிவிக்கப்பட்டது. அந்தப் பேருந்து எரிக்கப்பட்டதா? என சந்தேகத்தையும் தூண்டியது.
இதையும் படிக்க | 2024 - 'தி கிரேட்டஸ்ட்' ஸ்டீவ் ஸ்மித்தின் புத்துயிர்ப்பு!
சத்தீஸ்கரில் வாக்கு எண்ணிக்கையில் வாக்குப்பதிவு இயந்திரங்களின் எண்கள் மாற்றப்பட்டுள்ளதாக ஆதாரத்துடன் பதிவிட்டு காங்கிரஸின் பூபேஷ் பகேல் பரபரப்பை ஏற்படுத்தினார்.
எதுவாக இருந்தால் என்ன.. என்ன சிக்கல்கள் வந்தாலும் அடுத்து வரும் சட்டப் பேரவைத் தேர்தல்களில் வெற்றி கிடைத்தால் போதும், நமது பலம் என்ன என்பதை எதிரணியினருக்கு காண்பித்து சமாளித்துவிடலாம் என்று நினைத்த பாஜக அடுத்தடுத்த வெற்றிகளால் அதனை வென்று காட்டியதும் நினைவிருக்கலாம்.
அடுத்த ஜனநாயகத் திருவிழாவுக்கு 2027 வரை காத்திருக்க வேண்டும் - தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடுவும் ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ்குமாரும் மனது வைத்தால்!