பும்ராவின் 4,484 பந்துகளுக்குப் பிறகு முதல் சிக்ஸர்..! சாதனை படைத்த இளம் வீரர்!
2024 - 'தி கிரேட்டஸ்ட்' ஸ்டீவ் ஸ்மித்தின் புத்துயிர்ப்பு!
'அசாதாரணம் மிகுந்த அப்பேரொளி
வெடித்து வியாபிப்பதற்கு முதல் கணங்கள்
மிக மிகச் சாதாரணமானவை’
என்று இலங்கைப் பெண் கவிஞர் அனார் எழுதிய கவிதை வரிகளுக்கு ஏற்ப ஷேன் வார்னே ஆக வேண்டியவர் அதுவரை ஒருமுறைகூட பயிற்சி செய்யாத, திடீரென ஏற்பட்ட மன உந்துதலால் பேக் அன்ட் அக்ராஸ் பேட்டிங் பாணியில் விளையாடி நவீன காலத்து பிராட்மேன் எனப் புகழ்பெறும் அளவுக்கு வளர்ந்திருக்கும் ஸ்டீவ் ஸ்மித்தின் கிரிக்கெட் வாழ்க்கை திரைப்படம் போலிருக்கிறது...
கால்பந்தில் மெஸ்ஸி எப்படியோ அப்படி கிரிக்கெட்டில் ஸ்டீவ் ஸ்மித். தனித்துவம், நேர்மறையான சிந்தனை, சிறந்த கேப்டன், மிகச் சிறந்த ஃபீல்டர், தலைசிறந்த டெஸ்ட் பேட்டர்.
நவீன காலத்தின் டான் பிராட்மேன் என்று அழைக்கப்படும் ஸ்டீவ் ஸ்மித்தின் பாணி (ஸ்டைல்) யாரும் எளிதாக காப்பியடிக்க முடியாத வழக்கத்துக்கு மாறாக ஆடுபவர். ஒரேயொரு வார்த்தையில் சுயம்பு என்று சொல்லலாம்.
ஸ்மித்தின் தனிச்சிறப்பு என்ன?
டெஸ்ட் கிரிக்கெட்டில் முக்கியமானது இரண்டு விஷயங்கள். ஒன்று - பந்தினை விடுவது ( Ball leaving), இரண்டு - பந்தினை டிஃபென்ட் செய்வது (Defend the ball). ஸ்மித் இந்த இரண்டிலும் தனக்கே உரிய பாணியில் விளையாடி உலக கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த அன்புக்குரியவராகியுள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட் சலிப்படைகிறது என்று ஸ்டீவ் ஸ்மித் விளையாடும்போது சொல்லவே முடியாது. தமிழக ரசிகர்கள் ஸ்மித்தை டான்சிங் ரோஸ் (சார்பட்டா பரம்பரை படத்தின் கதாபாத்திரம்) என்று புகழ்கிறார்கள். அந்த அளவுக்கு ஒவ்வொரு பந்துக்கும் 100 சதவிகித முனைப்புடன் விளையாடுவார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் கவனம் (concentration) மிக மிக முக்கியம். நீண்ட நேரம் விளையாட வேண்டுமென்றால் கவனம் தேவை. சற்றுக் கவனம் பிசகினாலும் ஆட்டமிழக்க நேரிடும். கிரிக்கெட்டில் பந்துவீச்சினைவிட பேட்டிங் ஏன் கொண்டாடப்படுகிறது என்றால் வாய்ப்பு ஒருமுறைதான்.
டெஸ்ட்டில் இரண்டு இன்னிங்ஸ்கள் - இரண்டு வாய்ப்புகள், அதனால்தான் டெஸ்ட் கிரிக்கெட் கூடுதல் அழகு, கூடுதல் சுவாரசியம். டி20, டி10 கிரிக்கெட்டுக்கு உலகம் தயாராகி வந்தாலும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் இந்த மாதிரி டெஸ்ட் போட்டிகளை பார்க்க ஒரு லட்சம் பேர் வருகிறார்கள் என்பது நல்ல விஷயம்தானே!
ஸ்மித் ஏன் தலைசிறந்தவர்? அப்படி என்ன செய்தார்?
கிரிக்கெட்டில் ஸ்டேன்ஸ் (பேட்டர் நிற்கும் நிலை) மிகவும் முக்கியம். அதாவது ஒருவர் எப்படி நிற்கிறார் என்பதை வைத்தே அவர் நல்ல பேட்டரா இல்லையா என்று விவரம் தெரிந்தவர்கள் கணிக்கலாம்.
பேக் அண்ட் அக்ராஸ் (back and across) எனப்படுவது பந்து வீசுவதற்கு முன்பாகவே பேட்டிங் - கிரீஸில் வலது காலை ஆஃப் சைடு ஸ்டம்புக்கு நேராகவும் இடது காலை லெக் ஸ்டம்புக்கு நேராகவும் இருக்குமாறு நிற்பது. இதற்கு ஸ்டீவ் ஸ்மித் ஷஃபுல்ஸ் என்று பெயர். ஏனெனில் ஸ்மித் இப்படி விளையாடித்தான் பல நூறு ரன்களை குவித்துள்ளார்.
இதுமாதிரி ஸ்டேன்ஸுக்கு (நிலைக்கு) ஸ்மித் வந்துவிட்டால் எதிரணியினருக்கு கலக்கம் வந்துவிடும். அவரை ஆட்டமிழக்கவே செய்ய முடியாது. ருத்ர தாண்டவம்தான்.
பல மணி நேரம் ஷேடோவ் பேட்டிங் பயிற்சி செய்வார். ஃபீல்டிங் எங்கு நிற்பார்கள், எங்கு அடிக்க வேண்டுமென எல்லாவற்றையும் கற்பனையாக நினைத்து பேட்டினை வைத்து இரவெல்லாம் பயிற்சி செய்வார். திறமையைவிட கற்பனை முக்கியம் என ஐன்ஸ்டீனே சொல்லியிப்பதை இங்கு நினைவுபடுத்த தோன்றுகிறது.
பேக் அண்ட் அக்ராஸ் - இதை கிரிக்கெட்டில் டபுள் ட்ரிக்கர் (double trigger) என்றும் கூறுவார்கள். பந்து ஸ்டம்புக்கு வந்தால் எளிதாக மணிக்கட்டை (ரிஸ்ட்) சுழற்றி லெக்-சைடில் ரன் குவிப்பார். இதை வைத்துதான் ஸ்மித் 2015 தொடரில் சராசரி 128.16 ஆக இருக்குமாறு ரன்களை குவித்தார். பிறகு 2017 ஆம் ஆண்டில் தனது அதிகபட்ச சராசரியான 76.76-க்கு சென்றார். அந்த ஆண்டில் மட்டுமே 6 சதங்கள், 3 அரை சதங்கள் அடங்கும். 2017-18 ஆஷஸ் தொடரில் 687 ரன்கள். சராசரி 137.40 என்று விளையாடினார்.
தொடர்ச்சியாக 3 ஆஷஸ் தொடரிலும் 500க்கும் அதிகமான ரன்களை அடித்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார் ஸ்மித். உலகிலேயே சிறந்த பேட்டராக இருக்கும் டான் பிராட்மேன்கூட இதைச் செய்ததில்லை என்பதுதான் ஸ்மித்தை நவீன பிராட்மேன் என வர்ணிக்க முக்கிய காரணம்.
2013 இல் 12ஆவது இன்னிங்ஸில் தனது முதல் சதத்தை அடித்தார். அப்போது சராசரி 33. பின்னர் 2019இல் 64.95. தற்போது ஃபார்மில் இல்லாமல் 58.01 சராசரியுடன் இருக்கிறார். ஃபேப் போர் என்றழைக்கப்படும் தலைசிறந்த நால்வரின் (கோலி, ஸ்மித், வில்லியம்சன், ஜோ ரூட்) அதிகபட்ச சராசரியே ஸ்டீவ் ஸ்மித்தின் குறைந்தபட்சத்தைவிட குறைவு என்பது வியக்கத்தக்க புள்ளிவிவரம் அல்லவா! அதுதான் ஸ்மித் தனக்கே செய்து கொண்ட ஒரு பெஞ்ச்மார்க்.
தீப்பொறி பிறந்தது எப்போது?
எந்தக் கணத்தில் தான் ஷேன் வார்னே ஆகப் போவதில்லை, ஸ்டீவ் ஸ்மித் ஆகப் போகிறார் என்று உணர்ந்தார்? மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு கணத்தில் ஒரு ஒளி பிறக்கும். தன்னைக் கண்டறிதலுக்கான கணம் மிகவும் முக்கியமானது. கௌதம புத்தருக்கு எப்படி ஒரு மரணம் விழிப்படைய செய்ததோ அப்படி ஸ்மித்துக்கு இங்கிலாந்து வீரர்கள் வீசிய பௌன்சர் பந்துகள்தான் காரணமாக அமைந்திருக்கின்றன.
17 வயதில் கிரிக்கெட் விளையாட பள்ளிப்படிப்பினை துறந்த ஸ்டீவ் ஸ்மித் தனது 4 வயதிலேயே பேட்டிங் செய்ய விருப்பப்பட்டுள்ளார். பேட்டை எடுத்து விளையாடிவிட்டு பிறகு கீழே வைக்க மனமே வரவில்லையாம்.
டிச.13, 2013 அன்று இங்கிலாந்து உடனான தொடரில்தான் ஸ்மித் தான் ஒரு கிரேட்டஸ்ட் ஸ்டீவ் ஸ்மித் எனக் கண்டறிந்துள்ளார்.
இங்கிலாந்து வீரர்கள் பௌன்சர்களாக வீச அதை எப்படி எதிர்கொள்வதென சிந்தித்து தன்னியல்பாக கால்கள் அப்படி நகரந்ததென ஸ்மித் கூறியிருந்தார். பின்னர் அதுவே அவரது பழக்கம் ஆகிவிட்டதாம்.
ஒரு கவிஞன்/ எழுத்தாளனுக்குதான் தெரியும் ஒரு கவிதை/ கதை பிறக்கும் கணம் எப்படிப்பட்டது என்று. அனார் சொல்வதுபோல் அந்த சாதரண கணம்தான் அசாதாரண ஸ்டீ ஸ்மித்தை உருவாக்கியுள்ளது.
ஒன்றை உருவாக்குபவன் கலைஞன்தானே. விளையாட்டிலும் புது புதுப்புது பாணியை உருவாக்குபவன் கலைஞன்தான். ஸ்டீவ் ஸ்மித் தன்னை ஒரு பிராப்ளம் சால்வர் (problem solver) என்கிறார். அவருக்கு சுடோகு விளையாட பிடிக்கும்.
ஓராண்டு விளையாட தடை - ஸ்மித் வாழ்க்கையில் ஒரு கரும்புள்ளி
2017இல் உச்சத்தில் இருந்த ஸ்மித் 2018 இல் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற டெஸ்ட்டில் அவரது தலைமையிலான அணியில் பந்தினை சேதப்படுத்தினார்கள் (ball tampering). ஸ்மித் இதை நேரடியாக செய்யாவிட்டாலும் இதற்கு பொறுப்பேற்று கேப்டன் பொறுப்பிலிருந்து விலகினார்.
'கிரிக்கெட் ஆஸ்திரேலியா' அவரை ஓராண்டு விளையாட தடை விதித்தது. ஏனெனில் ஆஸ்திரேலியாவில் கிரிக்கெட்டுக்கு அவ்வளவு முக்கியத்துவம் தருவார்கள். எல்லா விளையாட்டுக்கும்தான். பரப்பளவில் இந்தியாவைவிட 2 மடங்கு சிறிய நாடு ஒலிம்பிக்ஸில் நம்மைவிட 8 மடங்கு அதிகமாக பதக்கம் வெல்கிறார்கள்.
மேலும் இரண்டு ஆண்டுகள் கேப்டனாக இருக்கவும் கிரிக்கெட் ஆஸி. தடை விதித்தது. ஸ்டீவ் ஸ்மித் அந்தப் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தந்தையுடன் கண்ணீர்வழியப் பேசியது கிரிக்கெட்டை நேசிக்கும் எவருக்கும் நெஞ்சைத்தொடும்.
அதில், “எனது உலகமே கிரிக்கெட்தான். இது எனது தலைமைப் பண்பின் (கேப்டன்சியின்) குறைதான். நான் யாரையும் குற்றம் சுமத்தவில்லை. எனது பெற்றோர்களுக்குத் தவறான பெயரைத் தந்துவிட்டேன். இதற்காக என் வாழ்நாள் முழுவதும் நான் வருந்துவேன். மீண்டும் உங்களிடம் நன்மதிப்பையும் மன்னிப்பையும் நிச்சயமாகப் பெறுவேன்” என்று சொல்லி கண்ணீருடன் சென்றார்.
ரிடெம்ஷன் - மீட்சி
2019இல் மீண்டும் கிரிக்கெட்டில் இணைந்தார். 2019 ஆஷஸ் தொடரில் தொடர்ச்சியாக சதங்கள் அடித்து அந்தத் தொடரில் 774 ரன்கள் எடுப்பார். சராசரி 110.57. உலகமே ஸ்மித்தின் எழுச்சியைப் பார்த்துப் புல்லரித்தது.
அதுவும் இங்கிலாந்தின் வேகப் பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் 150 கிமீ/ மணி வேகத்தில் பந்து வீசி தலையில் அடிப்பட்டு மீண்டும் வந்து விளையாடி சதமடிப்பார். இதெல்லாம் நிச்சயமாக கதாநாயகனுக்கு உண்டான தருணங்கள். ஸ்டீவ் ஸ்மித் பயோபிக் எடுத்தால் நிச்சயமாக இந்த பகுதிதான் மிகுந்த உணர்ச்சி மிகுந்ததாக இருக்கும். இரண்டு ஆண்டு காத்திருப்பின் வேட்டை அது.
திடீர் வீழ்ச்சி
இந்த உச்சத்துக்குப் பிறகு 2021இல் சதமடித்தார். டெஸ்ட்டில் தலைசிறந்தவராக இருந்தாலும் நவீன டி20 கிரிக்கெட்டில் புறக்கணிப்புக்கு உள்ளானார் ஸ்மித். அதனால், ஐபிஎல் தொடரில் தேர்வாகவில்லை.
பிபிஎல் தொடரில் தொடர்ச்சியாக இரண்டு சதங்கள் அடித்து அந்த அவப்பெயரையும் நீக்கினாலும் இப்போதுவரை அவரது டி20 கனவு பாதியிலேயே நிற்கிறது.
ஸ்மித் வீழ்ச்சிக்கு காரணம் EPDS - எலைட் பெர்ஃபாமென்ஸ் டிக்ளைன் சின்ரோம் (elite performance decline syndrome) என கிரேக் சேப்பல் கூறுகிறார். தங்களது முந்தைய சாதனையை முறியடிக்க முடியாத விரக்தி எனக் கூறுகிறார்.
புத்துயிர்ப்பு
தற்போது, இந்தியாவுக்கு எதிராக 3ஆவது போட்டியில் ஒன்றரை வருடத்துக்குப் பிறகு ஸ்மித் மீண்டும் சதம் அடித்தார்.
2013 டிசம்பரில் எப்படி பேக் அண்ட் அக்ராஸ் கண்டறிந்தாரோ அதேமாதிரி மீண்டும் பேக் அண்ட் அக்ராஸ் நிலையை அடைந்தார். இது கிட்டத்தட்ட ஸ்மித்துக்கு உயிர்த்தெழுதல் அல்லது புத்துயிர்ப்புக்கான காலம் எனலாம்.
10,000 ரன்களுக்கு இன்னும் 191 ரன்கள் தேவை. 50 சராசரிக்கு மேல் இந்த இலக்கை அடைந்தவர்களில் முதலிடத்தில் இருப்பது குமாரா சங்ககாராதான் (சராசரி 57). ஆனால், ஸ்மித் 58 சராசரியுடன் இருக்கிறார். இவ்வளவு சராசரியுடன் 10 ஆயிரம் ரன்களைக் கடக்கும் முதல் வீரர் என்றால் அது ஸ்டீவ் ஸ்மித்தான்!
கிரிக்கெட் உலகின் தலைசிறந்த வீரராக இருக்கும் ஸ்டீவ் ஸ்மித் (35) தனது கிரிக்கெட் வாழ்க்கையின் கடைசி அத்தியாயங்களில் இருக்கிறார். உச்சத்தில் பிரகாசமாக ஒளிரும் நட்சத்திரமாக கூடுதல் சாதனைகளுடன் அவர் மின்னுவார் என்றால் வியப்பதற்கு ஒன்றுமில்லை!