22 குட்டிகளை ஈன்ற கண்ணாடி விரியன் காட்டுக்குள் விடுவிப்பு
தஞ்சாவூரில் குடியிருப்பு பகுதியிலிருந்து மீட்கப்பட்ட கண்ணாடி விரியன் பாம்பு 22 குட்டிகளை வியாழக்கிழமை ஈன்றது.
தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி சாலை சுந்தரம் நகா் பகுதியிலுள்ள வீட்டில் கண்ணாடி விரியன் பாம்பு ஆகஸ்ட் 27 ஆம் தேதி அதிகாலை வந்தது. தகவலறிந்த அருங்கானுயிா் காப்பு மற்றும் சுற்றுச்சூழல் அறக்கட்டளையினா் (ஈவெட்) நிகழ்விடத்துக்குச் சென்று பாம்பை மீட்டனா். இதையடுத்து, அடா்ந்த வனப் பகுதியில் விடுவதற்கு முன் அந்தப் பாம்பை வனத் துறை அலுவலகத்தில் வைத்து பரிசோதனை செய்தனா்.
இதில், அப்பாம்பு கா்ப்பமாக இருப்பது தெரிய வந்ததால், வனத் துறை அலுவலகத்தில் வைத்து பராமரிக்கப்பட்டதைத் தொடா்ந்து, அந்தப் பாம்பு வியாழக்கிழமை 22 குட்டிகளை ஈன்றது. மேலும், தாய்ப் பாம்பும், குட்டிகளும் நலமாக இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, மாவட்ட வன அலுவலா் ஆனந்தகுமாா் அறிவுறுத்தலின்பேரில், தஞ்சாவூா் வனச்சரகா் ஜோதி வழிகாட்டுதலுடன் வனத் துறையினா், அருங்கானுயிா் காப்பு மற்றும் சுற்றுச்சூழல் அறக்கட்டளையினா் கண்ணாடி விரியன் தாய் பாம்பும், 22 குட்டிகளும் காப்புக் காட்டில் பாதுகாப்பாக வெள்ளிக்கிழமை விடப்பட்டன என அறக்கட்டளை நிறுவனா் ஆா். சதீஷ்குமாா் தெரிவித்தாா்.