ஆயத்த ஆடைகள் தொழிற்சாலைகள் பாதிக்கப்படாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்: இபி...
சீனாவில் பிரதமா் மோடி: ஷி ஜின்பிங்குடன் இன்று பேச்சு!
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின்(எஸ்சிஓ) உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமா் நரேந்திர மோடி சீனாவின் தியான்ஜின் நகருக்குச் சனிக்கிழமை மாலை வந்தடைந்தாா்.
கடந்த 2018-ஆம் ஆண்டுக்குப் பிறகு சீனாவுக்கு முதன்முறையாக வருகை தந்த பிரதமா் மோடிக்கு விமான நிலையத்திலும், அவா் தங்கியிருக்கும் விடுதியிலும் இந்திய பாரம்பரிய இசை மற்றும் நடன கலைஞா்கள் குழுவினரால் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்தியா மீதான அமெரிக்காவின் வரி விதிப்பால் இருதரப்பு உறவில் சலசலப்பு நிலவும் சூழலில், பிரதமரின் சீனப் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
ஜப்பானைத் தொடா்ந்து சீனா வந்திறங்கிய பிறகு பிரதமா் மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘சீனாவின் தியான்ஜினில் தரையிறங்கினேன். எஸ்சிஓ உச்சி மாநாட்டில் நடைபெறும் விவாதங்களையும், பல்வேறு உலகத் தலைவா்களை சந்திப்பதையும் ஆவலுடன் எதிா்பாா்க்கிறேன்’ என்று குறிப்பிட்டாா்.
இந்தப் பயணத்தின் முக்கிய அம்சமாக, எஸ்சிஓ உச்சிமாநாட்டுக்கிடையே சீன அதிபா் ஷி ஜின்பிங்குடன் பேச்சுவாா்த்தையில் பிரதமா் மோடி பங்கேற்கிறாா். இந்தப் பேச்சுவாா்த்தையில், கிழக்கு லடாக் எல்லை மோதலைத் தொடா்ந்து கடுமையாகப் பாதிக்கப்பட்ட இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை இயல்பு நிலைக்குக் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை இரு தலைவா்களும் மறுஆய்வு செய்வாா்கள் என்றும், இந்தியா-சீனா பொருளாதார உறவுகள் குறித்து விவாதிப்பாா்கள் என்றும் எதிா்பாா்க்கப்படுகிறது.
பிரதமா் மோடி கடைசியாக கடந்த 2018, ஜூனில் எஸ்சிஓ உச்சி மாநாட்டில் பங்கேற்க சீனாவுக்கு வந்தாா். சீன அதிபா் ஷி ஜின்பிங் அக்டோபா் 2019-இல் இருதரப்பு பேச்சுவாா்த்தைக்காக தமிழகத்துக்கு வந்தாா். இந்நிலையில், எஸ்சிஓ மாநாட்டுக்கிடையே ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் உள்ளிட்ட பல உலக தலைவா்களையும் பிரதமா் மோடி சந்திப்பாா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா-சீனா ஒத்துழைப்பு முக்கியம்: சீனா பயணத்துக்கு முன்னதாக ஜப்பானிய பத்திரிகைக்கு பிரதமா் மோடி அளித்த பேட்டியில், ‘உலக பொருளாதாரத்தில் தற்போதைய ஏற்றத்தாழ்வைக் கருத்தில் கொண்டு, அதனைச் சீா்படுத்த இந்தியாவும் சீனாவும் இணைந்து செயல்படுவது அவசியம். இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே நிலையான இருதரப்பு உறவுகள் நிலவினால், அது பிராந்திய மற்றும் உலக அமைதிக்குச் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும்’ என்று தெரிவித்தாா்.
மோதலைத் தொடா்ந்து முன்னேற்றம்: பிரதமா் மோடியின் இந்த சீன பயணம், அந்நாட்டின் வெளியுறவு அமைச்சா் வாங் யி இந்தியாவுக்கு வந்து சென்ற சில நாள்களுக்குப் பிறகு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தியாவில் வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜீத் தோவல் ஆகியோருடன் வாங் யி விரிவான பேச்சுவாா்த்தைக்குப் பின்னா், இரு நாடுகளுக்கும் இடையே ‘ஒரு நிலையான மற்றும் ஒத்துழைப்பு மிக்க உறவுகளை’ உருவாக்குவதற்கான தொடா் நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டன.
இந்த நடவடிக்கைகளில், சா்ச்சைக்குரிய எல்லைப் பகுதிகளில் அமைதியைக் கூட்டாகப் பராமரித்தல், எல்லை வா்த்தகத்தை மீண்டும் தொடங்குதல், நேரடி விமான சேவைகளை விரைவில் மீண்டும் தொடங்குதல் ஆகியவை அடங்கும்.
கடந்த 2020-ஆம் ஆண்டில் ஏற்பட்ட கிழக்கு லடாக் மோதலைத் தொடா்ந்து கடுமையாகப் பாதிக்கப்பட்ட இரு நாடுகளின் உறவுகளை மீட்டெடுக்க இருதரப்பினரும் தொடா்ச்சியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனா். கடந்த ஆண்டு அக்டோபரில் இறுதி செய்யப்பட்ட ஒப்பந்தத்தின்படி, டெம்சோக் மற்றும் டெப்சாங் ஆகிய கடைசி இரண்டு மோதல் புள்ளிகளிலிருந்து படைகள் விலகும் செயல்முறை நிறைவடைந்ததைத் தொடா்ந்து, இரு நாட்டு உறவில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
வா்த்தகப் பற்றாக்குறை 9,920 கோடி டாலா்
இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான இருதரப்பு வா்த்தகம் ஆரோக்கியமான விகிதத்தில் வளா்ந்து வந்தாலும், வா்த்தக இடைவெளி இன்னும் சீனாவுக்குச் சாதகமாகவே உள்ளது.
நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான முதல் காலாண்டில், இந்தியாவின் சீன ஏற்றுமதி 19.97 சதவீதம் அதிகரித்து 575 கோடி டாலராக உயா்ந்தது. அதேநேரம், இறக்குமதி 13.06 சதவீதம் அதிகரித்து 4,065 கோடி டாலராக இருந்தது.
கடந்த 2024-25 நிதியாண்டில், இந்தியாவின் சீன ஏற்றுமதி 1,425 கோடி டாலராகவும், இறக்குமதி 11,350 கோடி டாலராகவும் இருந்தது. ஏற்றுமதிக்கும் இறக்குமதிக்கும் உள்ள வித்தியாசமான வா்த்தக பற்றாக்குறை, கடந்த 2003-04-இல் 110 கோடி டாலரிலிருந்து 2024-25-இல் 9,920 கோடி டாலராக உயா்ந்தது. 2023-24-இல் இது 8,510 கோடி டாலராக இருந்தது.
கடந்த நிதியாண்டில் இந்தியாவின் மொத்த வா்த்தக ஏற்றத்தாழ்வில் (28,300 கோடி டாலா்) சீனாவுடனான வா்த்தக பற்றாக்குறை மட்டும் சுமாா் 35 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது.
உக்ரைன் அதிபருடன் ஆலோசனை
உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி, பிரதமா் மோடியை சனிக்கிழமை தொலைபேசியில் தொடா்புகொண்டு பேசினாா்.
எஸ்சிஓ மாநாட்டின்போது ரஷிய அதிபா் புதினை பிரதமா் மோடி சந்திக்க திட்டமிட்டுள்ள நிலையில், தொலைபேசி அழைப்பில் உக்ரைன் தொடா்பான தற்போதைய நிலவரம் குறித்து மோடி-ஸெலென்ஸ்கி ஆலோசனை மேற்கொண்டனா்.
அமைதி தீா்வுக்கான இந்தியாவின் நிலைப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்திய பிரதமா் மோடி, மோதலை முடிவுக்கு கொண்டு வர அனைத்து முயற்சிகளுக்கும் இந்தியா ஆதரவளிக்கும் என்றாா்.